எம்எல்ஏவுக்குக் கரோனா: புதுச்சேரி முதல்வர், சபாநாயகர், எம்எல்ஏக்கள் அனைவருக்கும் உமிழ்நீர் பரிசோதனை

எம்எல்ஏவுக்குக் கரோனா: புதுச்சேரி முதல்வர், சபாநாயகர், எம்எல்ஏக்கள் அனைவருக்கும் உமிழ்நீர் பரிசோதனை
Updated on
1 min read

புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்ற எதிர்க்கட்சி எம்எல்ஏ ஜெயபாலுக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் முதல்வர், சபாநாயகர், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு நோய்த்தொற்று உள்ளதா என்பதைக் கண்டறிய உமிழ்நீர்ப் பரிசோதனை சட்டப்பேரவை வளாகத்தில் இன்று நடைபெற்று வருகிறது. நாளை காலை இதன் முடிவுகள் தெரியவரும்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் கடந்த 20-ம் தேதி பட்ஜெட் தாக்கலானது. அதைத்தொடர்ந்து சட்டப்பேரவை நிகழ்வுகள் நடந்தன. கடந்த 23-ம் தேதி சட்டப்பேரவை நிகழ்வில் கலந்துகொண்ட கதிர்காமம் தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏ ஜெயபாலுக்குக் கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் சட்டப்பேரவைக் கூட்ட அரங்கம் மூடப்பட்டு சட்டப்பேரவை முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இதனால் ஜூலை 25-ம் தேதி சட்டப்பேரவை நிகழ்வுகள் திறந்தவெளியில் நடத்தப்பட்டன.

இதைத் தொடர்ந்து, "முதல்வர், சபாநாயகர், அமைச்சர்கள், அனைத்துச் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் உமிழ்நீர்ப் பரிசோதனை செய்யப்படும்" என்று முதல்வர் நாராயணசாமி அறிவித்தார்.

இச்சூழலில் சட்டப்பேரவைக் காவலர்கள் இருவருக்குக் கரோனா நோய்த்தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அனைத்து ஊழியர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்படும் என்று சட்டப்பேரவைச் செயலர் முனிசாமி அறிவித்தார். அத்துடன் சட்டப்பேரவை வளாகத்தை ஜூலை 27 மற்றும் 28-ம் தேதிகளில் முழுவதும் மூட உத்தரவிட்டார்.

இந்நிலையில் இன்று காலை சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் அலுவலகம் உட்பட அனைத்து அறைகளும் மூடப்பட்டிருந்தன. வளாகத்திலுள்ள கமிட்டி அறை மட்டும் திறக்கப்பட்டு உமிழ்நீர்ப் பரிசோதனை எடுக்கும் பணிகள் தொடங்கின. இதில் முதல்வர் நாராயணசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து, காங்கிரஸ் எம்எல்ஏ ஜெயமூர்த்தி என்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர் சந்திர பிரியங்கா, பாஜக நியமன உறுப்பினர் சாமிநாதன் என அனைவருக்கும் சுகாதாரத்துறை சார்பில் உமிழ் நீர்ப் பரிசோதனைப் பணிகள் நடந்து வருகின்றன.

இதுபற்றி சபாநாயகர் சிவக்கொழுந்து கூறுகையில், "அனைத்துச் சட்டப்பேரவை உறுப்பினர்களும் கரோனா பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். கடந்த 23-ம் தேதி சட்டப்பேரவையில் இருந்த அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்குப் பரிசோதனை செய்யப்படும்" என்று தெரிவித்தார்.

சுகாதாரத்துறை தரப்பில் கேட்டதற்கு, "பரிசோதனை முடிவுகள் நாளை காலை தெரிவிக்கப்படும்" என்று குறிப்பிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in