

புதுச்சேரியில் இன்று 131 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பாதிப்பு எண்ணிக்கை 2,787 ஆகவும், உயிரிழப்பு எண்ணிக்கை 40 ஆகவும் உயர்ந்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் இன்று (ஜூலை 26) கூறும்போது, "புதுச்சேரி மாநிலத்தில் நேற்று 624 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் தற்போது புதுச்சேரியில் 127 பேர், காரைக்காலில் 3 பேர், ஏனாமில் ஒருவர் என மொத்தம் 131 (20.9 சதவீதம்) பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் 94 பேர் கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரியிலும், 28 பேர் ஜிப்மரிலும், 4 பேர் கோவிட் கேர் சென்டரிலும், 3 பேர் காரைக்காலிலும், ஒருவர் ஏனாமிலும், பிற பகுதியில் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், கதிர்காமம் மருத்துவக் கல்லூரியில் ஒருவர், அரசு பொது மருத்துவமனையில் ஒருவர் என 2 பேர் உயிரிழந்துள்ளனர். சண்முகாபுரத்தைச் சேர்ந்த 58 வயது மதிக்கத்தக்க ஆண் காய்ச்சல், சளி காரணமாக கடந்த 16 ஆம் தேதி கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், அவர் 18 ஆம் தேதி தீவிர சிகிச்சைப் பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.
இதேபோல், முத்தியால்பேட்டை சோலை நகரைச் சேர்ந்த 57 வயது நபர் உயர் ரத்த அழுத்தத்தினால் நரம்புக் கோளாறு ஏற்பட்டு கை, கால் செயலிழந்த நிலையில் கடந்த 23 ஆம் தேதி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் சிகிச்சை பலனின்றி 24 ஆம் தேதி உயிரிழந்தார். அவருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று இருப்பது உறுதியானது. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.
தினமும் ஒருவர் அல்லது 2 பேர், கரோனா தொற்றுடன் வயதானவர் மற்றும் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக நோய் உள்ளிட்ட பல்வேறு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழந்து வருகின்றனர். இப்படிப்பட்ட நபர்கள் ஜாக்கிரதையாக தனிமைப்படுத்தப்பட வேண்டும். வெளியே சென்றுவிட்டு வரும் நபர்கள் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதேபோல் கர்ப்பிணிகள், சிறுவர்களையும் ஜாக்கிரதையாக பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் கடுமையான பாதிப்புகள் ஏற்படும்.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 2,787 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1,102 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் 46 பேர், ஜிப்மரில் 10 பேர், கோவிட் கேர் சென்டரில் 11 பேர், காரைக்காலில் 9 பேர், ஏனாமில் 8 பேர் என 84 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,645 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 35 ஆயிரத்து 80 மாதிரிகளுக்குப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 31 ஆயிரத்து 894 பரிசோதனைகள் 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது. 236 பரிசோதனைகள் முடிவுக்காக காத்திருப்பில் உள்ளன" எனத் தெரிவித்தார்.