

கடந்த 4 மாதங்களில் 25 நிறுவனங்களுடன் அரசு செய்துகொண்ட ஒப்பந்தங்கள் மூலம் ரூ.25,527 கோடி அளவிலான முதலீடுகள் தமிழகத்துக்கு வந்துள்ளன.
தமிழகத்தில் முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு கடந்த 2015-ல் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து 2019-ல் இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடுநடத்தப்பட்டது. இதன்மூலம் 400-க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக, தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்க முதல்வர் பழனிசாமி, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது பல நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, முதலீடுகளை உறுதி செய்தார்.
இந்நிலையில், கரோனா தொற்று உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. பொருளாதார சிக்கலும் ஏற்பட்டது. சில குறிப்பிட்ட நாடுகளில் இருந்து பல தொழில் நிறுவனங்கள் வேறு நாடுகளுக்கு தங்கள்தொழிற்சாலைகளை மாற்ற முடிவெடுத்தன. இந்த முதலீடுகளைதமிழகத்துக்கு ஈர்க்கும் வகையில்தலைமைச் செயலர் சண்முகம்தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
இதுபோன்ற நடவடிக்கைகளால் தற்போது பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கரோனா ஊரடங்கு காலத்தில் அதிக அளவில் முதலீடுகளை ஈர்த்த மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 4 மாதங்களில் மட்டும் 25 நிறுவனங்களுடன் தமிழக அரசு செய்துகொண்ட ஒப்பந்தங்கள் மூலம்ரூ.25,527 கோடி முதலீடுகள் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, ஜெர்மனியைச் சேர்ந்த டெய்ம்லர் நிறுவனம் வர்த்தக வாகனங்கள் தயாரிப்புக்காக ரூ.2,277 கோடியை முதலீடு செய்கிறது. பின்லாந்தை சேர்ந்த சால்காம் நிறுவனம் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் விதமாக கைபேசி தயாரிப்பில் ரூ.1,300 கோடியை முதலீடு செய்கிறது. தைவானின் அஸ்தான் ஷூஸ் நிறுவனம் 25 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் ரூ.250 கோடியை முதலீடு செய்கிறது.
இங்கிலாந்தின், சென்னை பவர்ஜெனரேஷன் நிறுவனம் ரூ.3 ஆயிரம் கோடியும், பிரான்சின் விவிட்சோலார் எனர்ஜி நிறுவனம் ரூ.2ஆயிரம் கோடியும், அமெரிக்காவின் ஹெச்டிசிஐ நிறுவனம் ரூ.2,800 கோடியும், சிங்கப்பூரின் எஸ்டி டெலி மீடியா ரூ.1,500 கோடியும், விக்ரம் சோலார் நிறுவனம் ரூ.5,423 கோடியும், யோட்டா நிறுவனம் ரூ.4 ஆயிரம் கோடியும் முதலீடு செய்கின்றன.
தமிழகத்தில் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ள 25 நிறுவனங்கள் மூலம் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது.