

சாத்தான்குளம் வழக்கை விசாரிக்கும் சிபிஐ குழுவிலுள்ள இருவருக்கு கரோனா உறுதியானதால் விசாரணைக்கென காவலில் எடுத்த 3 போலீஸாரை முன்கூட்டியே நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.
சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரிக்கிறது. இவ்வழக்கில் சாத்தான்குளம் காவல் ஆய் வாளர் ஸ்ரீதர், எஸ்ஐக்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கெனவே ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்ஐக்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் உட்பட 5 பேர் போலீஸ் காவலில் எடுத்து சிபிஐ மதுரை ஆத்திகுளத்திலுள்ள அலுவலகத்தில் வைத்து விசாரித்தனர். அவர்களை சாத்தான்குளம் அழைத்துச் சென்றும் விசாரித்து, வாக்குமூலம் பெற்றனர்.
மேலும், இந்த வழக்கில் கைதான தலைமைக் காவல் சாமத்துரை,முதல் நிலை காவலர்கள் வெயில்முத்து, செல்லத்துரை ஆகியோரும் சிபிஐ போலீஸ் காவலில் எடுத்தது.
அவர்களை நேற்று சாத்தான்குளத்திற்கு நேரில் அழைத்துச் சென்று விசாரித்தனர். இதன்பின் இரவு 3 காவலர்களும் மதுரை சிபிஐ அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.
இதற்கிடையில் போலீஸ் காவலில் இருந்த 3 காவலர்கள் உட்பட சிபிஐ குழுவில் இடம் பெற்று ஏடிஎஸ்பி சுக்லா உள்ளிட்ட 6 பேருக்கும் மதுரை அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை நேற்று மேற்கொள்ளப்பட்டது.
இதில் சிபிஐ குழுவிலுள்ள எஸ்.ஐ, சச்சின், காவலர் சைலேஷ்குமார் ஆகியோருக்கு மட்டுமே தொற்று இருப்பது தெரிந்தது.
இதையடுத்து இருவரும் தனிமைப்படுத்தப்பட்டனர். இதனால் இன்று (ஜூலை-23) ஆஜர்படுத்த வேண்டிய 3 காவலர்களிடமும் இன்றே வாக்குமூலம் பெறப்பட்டது. இதனையடுத்து, மூன்று காவலர்களும் முன்கூட்டியே மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும், மதுரை சிபிஐ கிளை அலுவலகத்தில் பணிபுரிவோருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என, சிபிஐ தரப்பில் கூறப்படுகிறது.