தந்தை, மகன் வழக்கு: 3 காவலர்களை சாத்தான்குளம் அழைத்துச் சென்றது சிபிஐ

தந்தை, மகன் வழக்கு: 3 காவலர்களை சாத்தான்குளம் அழைத்துச் சென்றது சிபிஐ

Published on

தந்தை, மகன் உயிரிந்த சம்பவம் தொடர்பாக காவலில் எடுக்கப்பட்ட 3 காவலர்களையும் சிபிஐ அதிகாரிகள் இன்று காலையில் சாத்தான்குளம் அழைத்துச் சென்றனர்.

சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ், அவர் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் ஊரடங்கின் போது கூடுதல் நேரம் செல்போன் கடையை திறந்து வைத்திருந்ததாக போலீஸாரால் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் தொடர்பாக சிபிஐ போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன், முதல் நிலை காவலர் முத்துராஜா, சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரை, தலைமைக் காவலர் சாமிதுரை, முதல் நிலைக் காவலர்கள் வெயில்முத்து, செல்லதுரை, தாமஸ் பிரான்க்ளின் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 பேரை 3 நாட்கள் சிபிஐ போலீஸார் காவலில் எடுத்து விசாரித்தனர்.

இந்நிலையில் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்தத் தகவலின் அடிப்படையில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தலைமைக் காவலர் சாமிதுரை, முதல்நிலைக் காவலர்கள் செல்லதுரை, வெயில்முத்து ஆகியோரை 3 நாட்கள் காவலில் எடுத்துள்ளனர்.
இந்நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) காலை செல்லதுரை, வெயில்முத்து, சாமிதுரை ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் சாத்தான்குளம் அழைத்துச் சென்றனர்.

மூவரின் காவலும் வரும் 23-ம் தேதி முடிவடைகிறது. அன்றைய தினம் மாலை வேளையில் மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னர் மூவரும் மதுரை தலைமைக் குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in