

உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த 3 ஊழியர்களுக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அவர்கள் பணிபுரிந்துவந்த அலுவலகங்கள் மூடப்பட்டு, கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகக் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் இதுவரை இல்லாத வகையில் முதன் முறையாக ஒரே நாளில் 78 பேருக்குக் கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 486 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை பாதிக்கப்பட்டோரில் 172 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் நோய்த்தொற்றால் இருவர் உயிரிழந்துள்ளனர். எஞ்சியுள்ள 312 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் நகரப் பகுதிகளில் மட்டுமே இதுவரை கரோனா நோய்த்தொற்று பரவி வந்த நிலையில் கடந்த சில நாள்களாக மாவட்டத்தின் சிறிய கிராமப் பகுதிகளிலும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உதகை, குன்னூர், கோத்தகிரி மற்றும் மஞ்சூர் பகுதிகளைச் சுற்றியுள்ள பல கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வெளியே வராமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.
இந்நிலையில் உதகையில் எட்டின்ஸ் சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்த செவிலியர் ஒருவருக்குக் கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அந்த மருத்துவமனை மூடப்பட்டது.
ஆட்சியர் அலுவலகத்திலும் கரோனா
இந்நிலையில், உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிந்து வந்த சுகாதார ஆய்வாளர், சி பிரிவில் ஒரு பெண் மற்றும் ஆட்சியரின் நேர்முக உதவியாளரின் (பொது) ஓட்டுநர் ஆகிய மூவருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனால், சி பிரிவு மூடப்பட்டு, அங்கு பணிபுரியும் ஊழியர்கள் அனுமதிக்கப்படவில்லை. கட்டுப்பாட்டு அறை ஆட்சியர் கூட்டரங்குக்கு மாற்றப்பட்டது.
ஆட்சியர் அலுவலக வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மேலும், ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
இன்று திங்கட்கிழமை என்பதால், மாவட்ட அதிகாரிகளுடனான கூட்டம் தொலைபேசியில் செயலி மூலம் நடத்தப்பட்டது. உதகையில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் மண்டல மேலாளர் மூலம் 15 ஊழியர்களுக்குத் தொற்று உறுதியாகியுள்ளது.