

திருக்குறள் ஆராய்ச்சி மற்றும் அறநெறி பரப்பும் உலக மையத்தை நிறுவ வேண்டும் என, பிரதமர் மோடிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (ஜூலை 19) வெளியிட்ட அறிக்கை:
"உயர்ந்த கருத்துக்களை கொண்ட சிறந்த நூல் திருக்குறள். அதனை இன்றைய இளைஞர்கள் படித்துப் பயன்பெற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். ஏற்கெனவே லடாக் எல்லை பகுதியில் படைவீரர்களை சந்தித்து உரையாடிய போது,
'மறம்மானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு'
என்ற திருக்குறளை மேற்கோள்காட்டி பேசியுள்ளார். இப்படி திருக்குறளின் மேன்மையை பெருமையை திக்கெட்டும் பேசி, பரப்பி வரும் பிரதமருக்கு தமிழ் மக்களின் சார்பாக நன்றியையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
திருக்குறளின் அருமை, பெருமையை அறிந்து, உணர்ந்து, மகிழ்ந்து போற்றிப் பேசிவரும் பிரதமர், 'திருக்குறள் ஆராய்ச்சி மற்றும் அறநெறி பரப்பும் உலக மையம்' ஒன்றை நிறுவ வேண்டும். அதன் மூலம் குறள் சொல்லும் அறம் சார்ந்த வாழ்வியல் நெறிகளை உலகமெல்லாம் பரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்"
இவ்வாறு ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.