

மாணவர்களின் மதிய உணவுக்கான அரிசி, பணம் வழங்கப்படும் என்று புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று (ஜூலை 18) புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியார்களிடம் கூறியதாவது:
"2020-21 ஆம் கல்வி ஆண்டில் நீட் அல்லாத பொறியியல், பாலிடெக்னிக், சட்டம் உள்ளிட்ட தொழில்முறை படிப்புகள் மற்றும் இளங்கலை படிப்புகளில் சேர்ந்து பயில்வதற்கான விண்ணப்பங்கள் 'சென்டாக்' (CENTAC) மூலம் 20 ஆம் தேதி முதல் ஆன்லைன் முறையில் வழங்கப்பட உள்ளது.
கல்லூரிகள் தொடங்குவதற்கு முன்பே அனைத்து விதமான பாடப்பிரிவுகளுக்கான சேர்க்கையையும் இம்மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கல்லூரி திறப்பு பின்னர் முடிவு எடுக்கப்படும்.
காரைக்கால், மாஹே, ஏனாம் பிராந்தியங்களில் அங்குள்ள கல்லூரிகளே 'சென்டாக்' மேற்பார்வையில் சேர்க்கையினை நடத்திக் கொள்ளும். எனவே, அந்த பிராந்தியங்களில் உள்ள மாணவர்கள், கல்லூரிகளில் நேரடியாக விண்ணப்பிக்க வேண்டும்.
புதுச்சேரியில் உள்ள கல்லூரிகளில் படிக்க விரும்பினால் ஆன்லைன் மூலமும் விண்ணப்பிக்கலாம்.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்புகளில் 2016-17 இல் 3,858 இடங்களே இருந்தன. தற்போது இருக்கும் வசதிகளை கொண்டு 6,620 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள ஐசிடி லேப் மற்றும் கணினி பயிற்றுநர்கள் உதவி செய்வார்கள். விண்ணப்ப கட்டணத்தை ரத்து செய்வது குறித்து முதல்வரிடம் பேசி அறிவிப்போம்.
கரோனா காலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. வசதியுள்ள மாணவர்கள் ஆன்லைனில் ஓரளவு கல்வி கற்று வந்தாலும், ஆன்லைன் வசதி கிடைக்காத ஏழை மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களது இழப்பை ஈடு செய்யும் வகையில் தமிழக அரசு தொலைக்காட்சி வாயிலாக பாடங்களை ஒளிபரப்ப ஏற்பாடு செய்துள்ளது.
எனவே, புதுச்சேரி மாணவர்கள் அதில் பலனடைய அந்த கல்வி நிகழ்ச்சிகளை உள்ளூர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப எம்.எஸ்.ஓ.க்கள் மற்றும் கேபிள் டிவி நிறுவனங்களுக்கு ஆட்சியர்கள் மூலம் கடிதம் அனுப்பப்பட உள்ளது. மேலும், புதுச்சேரி பள்ளி கல்வி இயக்ககம் சார்பாகவும் பாட நிகழ்ச்சிகள் தயாரித்து வழங்கப்பட உள்ளது.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இதுவரை வழங்கப்படாத மதிய உணவுக்கு பதிலாக 4 கிலோ அரிசி மற்றும் பிற பொருட்களுக்கான பணம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 4 கிலோ அரிசியுடன் ரூ.250 வழங்கப்படும். 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 4 கிலோ அரிசியுடன் ரூ.330 பணம் வழங்கப்படும்.
தற்போது பள்ளிகளில் மஞ்சள் அட்டைகளுக்கு அரிசி வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. அப்பணி முடிந்தவுடன் ஒரு வார காலத்தில் இத்திட்டம் தொடங்கப்படும். தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு எப்படி சட்டப்பாதுகாப்பு உள்ளதோ, அதுபோல் நிர்வாகத்துக்கும் சட்டப்பாதுகாப்பு உள்ளது. பெற்றோர் யாரும் எழுத்துப்பூர்வமாக புகார் கொடுக்க முன்வருவதில்லை. அவ்வாறு அளித்தால்தான் அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.
புதுச்சேரியில் 80 அரசுப் பள்ளிகள், 40 மாணவர்கள், 5 ஆசிரியர்களுடன் இயங்கி வருகின்றது. ஒவ்வொரு பள்ளிக்கும் ஆண்டுக்கு தலா ரூ.20 லட்சம் வரை செலவு செய்யப்படுகின்றது. எனவே, அருகில் உள்ள பள்ளிகளுடன் இணைத்து விடலாம் என்றால் சட்டப்பேரவை உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
எனவே, பெற்றோர் அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளில் இருந்து சான்றிதழை பெற்று வந்து அரசுப் பள்ளிகளில் சேர்க்க முன்வர வேண்டும். அல்லது 40 பெற்றோர்கள் வரை இணைந்து தனியார் பள்ளிகள் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும். அப்போது தனியார் பள்ளி நிர்வாகத்தால் ஒன்றும் செய்துவிட முடியாது.
எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்காவிட்டாலும் அரசால் தனியார் பள்ளியை எதிர்த்து ஒன்றும் செய்துவிட முடியாது. அதேசமயம் தனியார் பள்ளிகள் மீது புகார் அளிக்க இன்றே வாட்ஸ் அப் எண்ணுடன் கூடிய புகார் குழு ஒன்று அமைக்கப்படும்"
இவ்வாறு அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்தார்.