அரசு அலுவலகங்களில் ஊழியர்களை அச்சுறுத்தும் கரோனா: உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கக் கோரிக்கை

சித்தரிப்புப் படம்
சித்தரிப்புப் படம்
Updated on
1 min read

பெரும்பாலான மாவட்டங்களில் அரசு அலுவலகங்கள் முழுமையான அளவில் செயல்பட தொடங்கிவிட்ட நிலையில், அரசு அலுவலகங்களில் குறைந்தபட்சம் உடல் வெப்பநிலையைக் கணக்கிடும் தெர்மல் ஸ்கேனர் கூட இல்லாததால் வைரஸ் தொற்று அபாயம் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள்.

இது குறித்து ’இந்து தமிழ்’ இணையத்திடம் பேசிய நாகர்கோவிலைச் சேர்ந்த வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான ஹோமர்லால், “கன்னியாகுமரி மாவட்டத்தில் நூலகத்துறை தவிர, அனைத்து அரசு அலுவலகங்களும் முழு அளவில் இயங்கி வருகின்றன. பொதுமக்களும் அரசு அலுவலகங்களுக்கு அதிக அளவில் வரத் தொடங்கி இருக்கிறார்கள். இருப்பினும் வெகுஜனத் தொடர்பில் இருக்கும் காவல்துறை மற்றும் உள்ளாட்சித் துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பரவல் ஏற்படுவதும் சம்பந்தப்பட்ட அலுவலகங்கள் மூடி சீல் வைக்கப்படுவதும் தொடர்கிறது.

காவல் துறையினருக்கு வைரஸ் தொற்று ஏற்படுவதால் பொதுமுடக்கத்தை அமல்படுத்துவதிலும் நோயைக் கட்டுப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகளிலும் பெரும் பின்னடைவு ஏற்படுகிறது. அதேபோல் உள்ளாட்சித்துறை ஊழியர்களும் நோய்த்தொற்றுக்கு ஆளாவதால் ஊராட்சிப் பகுதிகளில் நோயைக் கட்டுப்படுத்த உள்ளாட்சி நிர்வாகங்கள் எடுக்கும் நடவடிக்கைகளில் பெரும் தொய்வு ஏற்பட்டு வருகிறது.

இதையெல்லாம் ஓரளவுக்குக் கட்டுப்படுத்த வேண்டுமானால் அரசு அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களைக் குறைந்தபட்சம் தெர்மல் ஸ்கேனர் கருவி கொண்டு பரிசோதனையாவது செய்ய வேண்டும். இதன் மூலம் கரோனா தடுப்புப் பணியில் இருக்கும் காவலர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் தொற்றுக்கு ஆளாகாமல் இருப்பார்கள். கரோனா ஒழிப்புப் பணிகளும் தடங்கலின்றி நடக்கும்.

அதேபோல், குமரி மாவட்டத்தில் கடைகள், வணிக நிறுவனங்கள் மாலை 5 மணிவரை மட்டுமே செயல்பட அனுமதித்திருக்கும் நிலையில் டாஸ்மாக் கடைகளை மட்டும் இரவு 8 மணி வரை இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் சாலையில் போக்குவரத்து அதிகரித்துக் காணப்படுகிறது. இதனால் நோயைக் கட்டுக்குள் கொண்டுவர அதிகாரிகள் எடுக்கும் நடவடிக்கைகள் பலனின்றிப் போகின்றன.

எனவே, இனி வரும் காலங்களில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மதியம் 2 மணி வரை மட்டுமே இயங்க அனுமதிக்க வேண்டும். டாஸ்மாக் கடைகளையும் 2 மணிக்கு மேல் திறந்திருக்க அனுமதிக்கக் கூடாது. அப்போதுதான் குமரி மாவட்டத்தில் வேகமாகப் பரவி வரும் கரோனா தொற்றை ஓரளவுக்காவது கட்டுக்குள் கொண்டுவர முடியும்”என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in