

புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 91 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் இத்தாலி முதியவர் உட்பட 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் இன்று (ஜூலை 17) கூறும்போது, "புதுச்சேரி மாநிலத்தில் இன்று 856 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் தற்போது புதுச்சேரியில் 79 பேர், காரைக்காலில் 9 பேர், ஏனாமில் 3 பேர் என மொத்தம் 91 பேருக்கு (10.6 சதவீதம்) தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் 40 பேர் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியிலும், 39 பேர் ஜிப்மரிலும், 9 பேர் காரைக்காலிலும், 3 பேர் ஏனாமிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், ஜிப்மரில் 2 பேர், ஏனாமில் ஒருவர் என 3 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். குறிப்பாக, இத்தாலி நாட்டைச் சேர்ந்த 92 வயது முதியவர் புதுச்சேரியில் வசித்து வந்தார். அவர் கடந்த 2 ஆம் தேதி ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டார். 15 ஆம் தேதி முதல் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று (ஜூலை 16) அவர் உயிரிழந்தார். அவருக்கு நுரையீரல் பாதிப்பு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகள் இருந்தது.
இதேபோல், முதலியார்பேட்டை உழந்தை கீரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 83 வயது முதியவரும் தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 3 ஆம் தேதி ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டார். 4 ஆம் தேதி தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். 15 ஆம் தேதி முதல் வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று காலை சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். கரோனா பாதிப்பால் அவரது இரண்டு நுரையீரலும் பாதிக்கப்பட்டு ரத்த அழுத்தம் குறைந்து உயிரிழந்துள்ளார்.
மேலும், ஏனாமை சேர்ந்த 72 வயது மூதாட்டி கடந்த 16 ஆம் தேதி காக்கிநாடாவில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் உயிரிழந்து விட்டார். அவரை பரிசோதனை செய்தபோது, தொற்று இருப்பது உறுதியானது. மேலும், அவருக்கு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல பாதிப்புகள் இருந்துள்ளன. இதனால் இறப்பு எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.
வயதானவர்கள் எளிதாக நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு தப்ப முடியாமல் உயிரிழக்கின்றனர். அதேபோல் நேற்று 9 மாத குழந்தை உயிரிழந்துள்ளது. ஆகையால், மிகவும் வயது குறைந்தவர்கள், மிகவும் வயதானவர்கள் மற்றும் நீழிரிவு நோய், ரத்த அழுத்தம், இருதய நோய், நுரையீல் நோய், சிறுநீரக நோய் உள்ளவர்கள் எளிதாக கரோனா தொற்றில் இருந்து தப்பிக்க முடியாது. எனவே, மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும். தனி மனித சுகாதாரம், தனிமனித இடைவெளியை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும்.
மேலும், ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 1,832 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் தற்போது கதிர்காமம் மருத்துவக் கல்லூரியில் 375 பேர், ஜிப்மரில் 200 பேர், 'கோவிட் கேர் சென்ட'ரில் 109 பேர், காரைக்காலில் 74 பேர், ஏனாமில் 35 பேர் என மொத்தம் 793 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாஹே பிராந்தியம் மட்டும் தொற்று இல்லாத பகுதியாக மாறியுள்ளது.
இன்று கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் 30 பேர், ஜிப்மரில் 14 பேர், 'கோவிட் கேர் சென்ட'ரில் 20 பேர், காரைக்காலில் 2 பேர், மாஹேயில் ஒருவர் என மொத்தம் 67 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமடைந்து வீடு சென்றவர்களின் எண்ணிக்கை 1,014 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 28 ஆயிரத்து 995 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 26 ஆயிரத்து 781 பரிசோதனைகள் 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது. 313 பரிசோதனைகளுக்கு முடிவு வர வேண்டி இருக்கிறது" எனத் தெரிவித்தார்.