

புதுக்கோட்டை மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிய கைதி நள்ளிரவில் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே 7 வயது சிறுமியை ஏம்பல் கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்ற சாமுவேல் (27), 2 வாரங்களுக்கு முன்பு பாலியல் ரீதியாக துன்புறுத்திக் கொலை செய்தார்.
பின்னர், சடலத்தைக் கண்மாய் கரையோரம் கருவேலங் காட்டுக்குள் வீசி சென்றார். இந்த துயரமான சம்பவம் தமிழகம் முழுவதும் கடுமையான அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக ஏம்பல் காவல்துறையினர் ராஜாவை கைது செய்து புதுக்கோட்டை மாவட்ட சிறையில் அடைத்திருந்தனர்.
இந்நிலையில், மருத்துவ பரிசோதனைக்காக காவல்துறை பாதுகாப்புடன் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளிகள் பிரிவில் ராஜா, கடந்த 15-ம் தேதி சேர்க்கப்பட்டார்.
திடீரென காவல்துறையினர் கண்ணிமைக்கும் நேரத்தில் கைவிலங்கை உருவிக்கொண்டு ராஜா நேற்று (ஜூலை 16) தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து கணேஷ் நகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து, மருத்துவமனை அமைந்துள்ள வனப்பகுதி எங்கும் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பல்வேறு பகுதிகளாக பிரிந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். மேலும், ட்ரோன் கேமராக்கள், மோப்ப நாய் கொண்டும் தேடப்பட்டு வந்தது.
இந்நிலையில், தஞ்சாவூர் சாலை சிட்கோ அருகே நள்ளிரவில் காட்டுக்குள் பதுங்கி இருந்த ராஜாவை நள்ளிரவில் காவல்துறையினர் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். பின்னர், விசாரணைக்காக கணேஷ் நகர் காவல் நிலையத்துக்கு காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.
கைதியை தப்ப விட்ட தலைமைக் காவலர் முருகையன், காவலர் கோகுல் குமார் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவிட்டார்.