

புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் புதிய உச்சமாக 147 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், ராஜீவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 9 மாதக் குழந்தை உயிரிழந்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் இன்று (ஜூலை 16) புதிதாக 147 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது மருத்துவப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,743 ஆகவும், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 774 ஆகவும் அதிகரித்துள்ளது. மேலும், ராஜீவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 9 மாத ஆண் குழந்தை தொற்றுக்கு உயிரிழந்துள்ளது. இதனால் இறப்பு எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 947 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் இன்று கூறும்போது, "புதுச்சேரியில் அதிகபட்சமாக 1,079 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் தற்போது 147 பேருக்கு (13.6 சதவீதம்) தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில், 68 பேர் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியிலும், 60 பேர் ஜிப்மரிலும், 12 பேர் காரைக்காலிலும், 7 பேர் ஏனாமிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த 9 மாத ஆண் குழந்தை கடுமையான வயிற்றுப்போக்கு காரணமாக ராஜீவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் கடந்த 14 ஆம் தேதி காலை அனுமதிக்கப்பட்டது. தொடர்ந்து வயிற்றுப்போக்கு தீவிரமாகவே தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்தக் குழந்தை சிகிச்சை பலனின்றி நேற்று (ஜூலை 15) உயிரிழந்தது.
அந்தக் குழந்தைக்கு கரோனா பரிசோதனை செய்ததில் 'பாசிட்டிவ்' என்று வந்துள்ளது. இதனால் இளம் வயதுக் குழந்தைகளும், வயதான முதியவர்களும் எளிதில் கரோனா தொற்றுக்குப் பாதிக்கப்படுவார்கள் என்று தெளிவாகத் தெரிகிறது. ஆகவே, தேவையின்றி ஆண்கள் வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தால் பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் என அனைவரும் பாதிக்கப்பட வாய்ப்புண்டு.
உயிரிழப்பு ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்களும் அதிக அளவு இருக்கிறது. ஆகவே, மக்கள் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 1,743 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் தற்போது கதிர்காமம் மருத்துவக் கல்லூரியில் 379 பேர், ஜிப்மரில் 177 பேர், கோவிட் கேர் சென்டரில் 117 பேர், காரைக்காலில் 67 பேர், ஏனாமில் 33 பேர், மாஹேவில் ஒருவர் என மொத்தம் 774 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் 30 பேர், ஜிப்மரில் 14 பேர், கோவிட் கேர் சென்டரில் 13 பேர், ஏனாமில் ஒருவர் என 58 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 947 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 27 ஆயிரத்து 916 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 25 ஆயிரத்து 907 பரிசோதனைகள் 'நெகட்டிவ்' என்று வந்துள்ளது. இன்னும் 270 பரிசோதனைகள் முடிவுக்காக காத்திருப்பில் உள்ளன" எனத் தெரிவித்தார்.