

முன்னாள் முதல்வர் காமராஜரின் 118-வது பிறந்த நாளை முன்னிட்டு அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நேற்று அவருக்கு மரியாதை செலுத்தினர்.
காமராஜரின் 118-வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக அரசின் சார்பில் சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள அவரது சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்ட படத்துக்கு, அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ, பா.பெஞ்சமின், கே.பாண்டியராஜன் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில், செய்தித் துறை செயலர் மகேசன் காசிராஜன், செய்தித் துறை இயக்குநர் பி.சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் காமராஜரின் படத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி,நாடாளுமன்ற திமுக குழு துணைத்தலைவர் கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன்,இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மாவட்டச்செயலாளர்கள் பி.கே.சேகர்பாபு,மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
அரியலூரில் உள்ள காமராஜர் சிலைக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் அமைந்துள்ள காமராஜர் சிலை மற்றும் அலங்கரிக்கப்பட்ட அவரது படத்துக்கு தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், கே.ஜெயக்குமார் எம்.பி., காங்கிரஸ் மாநில ஊடகப்பிரிவுத் தலைவர் ஆ.கோபண்ணா, சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிவ.ராஜசேகரன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சென்னை தியாகராயநகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்தில் உள்ள அவரது சிலைக்கு காங்கிரஸ் சார்பில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்சு.திருநாவுக்கரசர், இளங்கோவன், ஜெயக்குமார் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தமாகா தலைமை அலுவலகத்தில் காமராஜர் படத்துக்கு தமாகா தலைவர் ஜி.கே .வாசன், மாநிலப் பொதுச்செயலாளர்கள் ஏ.எஸ்.சக்திவேல், முனவர் பாட்சா,தலைமை நிலையச் செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் காமராஜர் படத்துக்கு பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன், மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, மாநிலப் பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், மாநில ஊடகப் பிரிவுத் தலைவர் ஏ.என்.எஸ்.பிரசாத் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
அண்ணா நகரில் உள்ள மதிமுகபொதுச்செயலாளர் வைகோவின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த காமராஜரின் படத்துக்கு வைகோ உள்ளிட்ட அக்கட்சியினர் மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் உள்ள காமராஜர் சிலைக்குவிடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சமக தலைவர் சரத்குமார், சென்னையில் உள்ள தனது இல்லத்தில் காமராஜரின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தியாகராய நகரில் உள்ள காமராஜரின் நினைவு இல்லத்தில் உள்ள அவரது சிலைக்கு பெருந் தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என்.ஆர்.தனபாலன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.