

மதுரையில் அதிகரிக்கும் கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு வாகனத் தணிக்கையை போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து நோய்த் தொற்று அதிகரிக்கிறது. மாவட்ட நிர்வாகம் தீவிர தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது நேற்று ஒரே நாளில் 464 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
தொடர்ந்து தொற்று வேகமெடுப்பதால் காய்ச்சல் சிறப்பு முகாம்கள் மூலம் நோய்ப் பரவலை கட்டுக்குள் கொண்டு வரலாம் என்ற நம்பிக்கையில் மாவட்டத்தில் மேலும், 2 நாள் முழு ஊரடங்கு நீடிக்கப்பட்டது. இது இன்றுடன் முடிவடைகிறது.
இந்நிலையில் மதுரையில் தொற்று அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு தேவையின்றி வெளியில் வாகனங்களில் சுற்றும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள காவல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹா உத்தரவிட்டார்.
இதையடுத்து வழக்கத்தை விட இன்று கோரிப்பாளையம், ஆவின் சந்திப்பு, அண்ணா பேருந்து நிலையம், சிம்மக்கல், காளவாசல், தெப்பக்குளம், பழங்காநத்தம், அழகர்கோயில் சாலை உட்பட பல்வேறு இடங் களில் மாலையில் காவல்துறையினர் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
முக்கிய பாலங்கள், வழித்தடங்களைத் தடை செய்தனர். மாவட்ட எல்லையிலும் இ.பாஸ் விதிமீறல்களை தீவிரமாக கண்காணிக்கின்றனர்.
அத்தியாவசியத் தேவை தவிர்த்து, தேவையின்றி வெளியில் சுற்றிய நபர்கள், முகக்கவசம் அணியாமல் சென்ற நூற்றுக்கணக்கானோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அபராதம் வசூலிக்கப்பட்டது.