

மதுரை நகரில் சுகாதாரத்துறை போன்று, கரோனா தடுப்பில் முன்களத்தில் காவல்துறையினரும் பணி செய்கின்றனர். கரோனா பாதிப்பைத் தடுக்க, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தாலும், காவல்துறையினரையும் கரோனா விட்டு வைக்கவில்லை.
தெற்குவாசல் காவல் நிலைய எஸ்.ஐ ஒருவருக்கு தொடங்கி தற்போது, நகரில் மட்டுமே 160-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புறநகர் பகுதியில் 45-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக தொற்று பாதித்த காவல்துறையினர் மதுரை ரயில்வே மருத்துவமனை, தியாகராசர் கல்லூரி மற்றும் தோப்பூரில் சிகிச்சை பெறுகின்றனர்.
இந்நிலையில் கரோனா பாதிப்பால் சிகிச்சை பெறும் காவலர்களின் மன உளைச்சல், பயத்தைப் போக்க, அணணாநகர் பெண் காவல் உதவி ஆணையர் லில்லி கிரேஸ் மொபைலில் தன்னம்பிக்கை கவுன்சிலிங் அளிக்கிறார்.
பாதிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் பயத்தைப் போக்க மனநல ஆலோசனைகளை வழங்குகிறார். சிகிச்சை மற்றும் இவரது தன்னம்பிக்கை பேச்சால் பலர் குணமடைந்து மீண்டும் பணிக்கு திரும்பியதாக அவர் நம்பிக்கை தெரிவிக்கிறார்.
இது குறித்து அவர் கூறுகையில், "ஏற்கெனவே காவல் துறையில் சிலர் பணிகளுக்கு இடையே குடும்பம் சூழல் என, பல வகையில் மனழுத்ததிற்கு ஆளாகலாம். கரோனா பயத்தால் மேலும், மன உளைச்சல், பயம் ஏற்படலாம். என்னைப் போன்ற அதிகாரிகள் அவர்களுடன் பேசி, மனநல ஆலோசனைகளை வழங்கினால், அதிகாரிகளே அக்கறை எடுக்கின்றனர் என்ற நம்பிக்கையில் பயம் நீங்கும்.
அதிகாரி போன்று பேசாமல் நண்பர், குடும்ப உறுப்பினர் போன்று ஜாலியாக பேசுவது, குடும்ப விவரம், நோய் அறிகுறி, சிகிச்சைக்குப் பின் பாதுகாப்பு போன்ற கருத்துக்களைப் பகிர்ந்து தன்னம்பிக்கையை ஏற்படுத்துகிறேன்.
மேலும், சிகிச்சையிலுள்ள காவலர்கள் உணவு உள்ளிட்ட உதவிகளும் சாய் விருட்சா டிரஸ்ட் சார்பில் தன்னார்வலர்கள் மூலம் வழங்கப்படுகிறது. இது வரை 80-க்கும் மேற்பட்ட போலீஸாருக்கு தன்னம்பிக்கை அளிக்கப்பட்டுள்ளது. இது தொடரும்" என்றார்.