

பார்வைத்திறன் இல்லாத மாற்றுத்திறனாளி சேமித்து வைத்திருந்த மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூ.24 ஆயிரத்தைப் பெற்றுக் கொண்டு அவர்களுக்கு தனது சொந்த நிதியில் இருந்து அதற்கு ஈடான புதிய ரூபாய் நோட்டுக்களை மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் வழங்கினார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த வேம்பத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் சோமு (58), பார்வையற்றவர். இவரது மனைவி பழனியம்மாள் (49), மாற்றுத்திறனாளி. பேருந்தில் ஊதுபத்தி, சாம்பிராணி விற்பனை செய்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர். தற்போது கரோனா பாதிப்பு காரணமாக இவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தங்களது வீட்டில் சேமித்து வைத்திருந்த பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூ.24 ஆயிரம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் சோமுவுக்கு தற்போது கிடைத்துள்ளது. இந்த ரூபாய் நோட்டுகள் செல்லாது என்பதை அறிந்த சோமு, இதனை மாற்றிக் கொடுத்தால் தங்களுக்கு உதவியாக இருக்கும் என வேதனையுடன் வேண்டுகொள் விடுத்தார்.
இத்தகவலை அறிந்த ஈரோடு ஆட்சியர் சி.கதிரவன், சோமு - பழனியம்மாள் தம்பதியை நேற்று (ஜூலை 13) தனது முகாம் அலுவலகத்திற்கு அழைத்து, ரூ.24 ஆயிரம் மதிப்புள்ள பணமதிப்பிழந்த ரூபாய் நோட்டுகளைப் பெற்றுக்கொண்டு, அதற்கு பதிலாக தனது சொந்த நிதியிலிருந்து ரூ.25 ஆயிரம் வழங்கினார். பழைய ரூபாய் நோட்டுக்களை முன்னோடி வங்கி மேலாளர் மூலம் கருவூலத்தில் ஒப்படைக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.