

குறுந்தகவல் அனுப்பி அறிவுறுத்தும் மதுரை காவல் ஆணையரின் புதிய அணுகுமுறையை போலீஸார் வரவேற்கின்றனர்.
மதுரை நகர் புதிய காவல் ஆணையராக பிரேம் ஆனந்த் சின்ஹா கடந்த வாரம் பொறுப்பேற்றார். அவர் பதவி ஏற்றுக் கொண்டபோது, நகரில் நடக்கும் குற்றச் செயல்களுக்கு ஏற்ப துரிதமாக, தொழில்நுட்ப ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும், வீடு தோறும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுப்போம் எனத் தெரிவித்தார்.
காவல்துறை நலன் காக்கும் வகையில், கரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க 57 வயதுக்கு மேல் பிற பாதிப்புகளுக்குரிய காவல்துறையினருக்கு ஓய்வளிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
கடந்த 8-ம்தேதி கர்ப்பிணியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுநர் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய உத்தரவிட்டார். இது போன்ற பல திட்டங்களை அமல்படுத்த திட்டமிட்டுள்ளார்.
மதுரை நகரில் குற்றச் சம்பவம், கொலை, வழிப்பறி மற்றும் சட்டம், ஒழுங்கு பிரச்சினை அதிகரிக்கக்கூடாது. முன்கூட்டியே தடுக்க, என்ன வழிமுறையோ அதை மேற்கொள்ளவேண்டும்.
எதுவாக இருந்தாலும் கவனத்துக்கு கொண்டுவரவேண்டும் என, காவல்துறையினருக்கு பல்வேறு அறிவுகளை அவர் வழங்கியுள்ளார். இருப்பினும், எங்கு பிரச்சினையோ சம்பந்தப்பட்ட காவல் துறையினருக்கே மொபைலில் பேசுவதோடு, குறுந்தகவல்களை அனுப்பி, நடவடிக்கை குறித்த அறிவுரைகளை வழங்குகிறார்.
இதனால் காவல் ஆணையர் எப்போது மொபைலில் பேசுவார், குறுந்தகவல் அனுப்புவார் என்ற கலக்கமும் சிலருக்கு ஏற்பட்டுள்ளது.
போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘பெரும்பாலும், ஒவ்வொரு அதிகாரியும் ஒருவிதமான அணுகுறையைக் கையாளுவர். மைக்கில் அறிவுரை கூறுவதைவிட சம்பந்தப்பட்ட காவல்துறையினருக்கு குறுந்தகவலாக பகிர்கிறார். ஒருவரை திட்டுவதாக இருந்தாலும், பிறருக்கு தெரியவேண்டாமே என்ற எண்ணத்திலும் இதை பின்பற்றலாம். ஆணையரே சொல்கிறார் ‘‘ என அக்கறையோடு செயல்பட உற்சாகமாக அமையும்,’’ என்றார்.