இ-பாஸ் கிடைக்காததால் அறுவடைப் பணிகள் பாதிப்பு: கோவை மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் முறையீடு

இ-பாஸ் கிடைக்காததால் அறுவடைப் பணிகள் பாதிப்பு: கோவை மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் முறையீடு
Updated on
1 min read

கோவை மாவட்டத்தில் இ-பாஸ் கிடைக்காததால் சின்ன வெங்காயம் உள்ளிட்ட விளைபொருட்களின் அறுவடை, சந்தைப்படுத்தல் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, விளைநிலங்களில் அறுவடை செய்யவும், சந்தைப்படுத்தவும் வரும் விவசாயத் தொழிலாளர்களுக்குத் தடையின்றி இ-பாஸ் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாகத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவர் சு.பழனிசாமி, துணைத் தலைவர் தீத்திபாளையம் பெரியசாமி மற்றும் நிர்வாகிகள், கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணியிடம் இன்று மனு அளித்தனர்.

பின்னர் விவசாயிகள் கூறியதாவது:

’’விவசாயிகளுக்குப் பாரதப் பிரதமரின் கிசான் கிரெடிட் கார்டுகள் வழங்குவதில் மிகுந்த காலதாமதம் செய்யப்படுவதால், விவசாயிகள் வங்கிக் கடனுதவிகளைப் பெற முடியாமல் தவிக்கின்றனர். எனவே, அனைத்து விவசாயிகளுக்கும், வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை மூலம் கிசான் கிரெடிட் கார்டுகளை வழங்க வேண்டும்.

தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்ததை விவசாயப் பணிகளுக்கும் விரிவுபடுத்தி, அதில் பணிபுரிவோரை விவசாயப் பணிகளில் ஈடுபடுத்த வேண்டும்.

கோவை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் விவசாயிகள் சின்ன வெங்காயம், தக்காளி, முட்டைகோஸ், வாழை, தென்னை, வெண்டைக்காய் உள்ளிட்ட பயிர்களைச் சாகுபடி செய்து வருகின்றனர். இதனிடையே மாவட்ட எல்லைப் பகுதிகளில் விவசாயம் செய்யும் விவசாயிகள், விவசாய வேலைக்கு வரும் கூலித் தொழிலாளிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும், அருகில் உள்ள மாவட்ட எல்லைப் பகுதிகளில் இருந்து வருபவர்களாக உள்ளனர்.

ஊரடங்கு காரணமாக விளைபொருட்களை அறுவடை செய்யக் கூலி ஆட்கள் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு இ-பாஸ் மறுக்கப்படுகிறது. எனவே விவசாயிகளுக்குத் தடையின்றி இ-பாஸ் வழங்க வேண்டும். இதன் மூலம் விவசாயத்தில் நிலவி வரும் ஆட்கள் பற்றாக்குறை பிரச்சினைக்கும் தீர்வு காணப்படும்’’.
இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in