காங்கிரஸுக்கு எதிரான அவதூறுப் பிரச்சாரங்களை முறியடிக்க இணைய இதழ்; காமராஜர் பிறந்த நாளில் தொடக்கம்
காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காகவும் காங்கிரஸ் கட்சி மீது தொடுக்கப்படும் அவதூறுகளுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகவும் ‘தேசிய முரசு டாட் காம்’ என்ற இணைய இதழை காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15-ல் தொடங்கவிருப்பதாக தமிழகக் காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவுத் தலைவர் ஆ.கோபண்ணா அறிவித்துள்ளார்.
கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு பயணித்து வரும் கோபண்ணா, ஒரே ஒருமுறை மட்டும் தேர்தல் அரசியலில் ஈடுபட்டார். அதன் பிறகு அந்தப் பாதையைவிட்டு விலகி, கட்சி வளர்ச்சிப் பணிகளிலும் கட்சிக்கான ஊடகப் பணிகளைக் கவனிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். 1989-ல் ‘நவசக்தி’ நாளேட்டின் பொறுப்பாசியராக இருந்த கோபண்ணா, 13 மாதங்கள் அந்தப் பணியைச் செம்மையாகச் செய்தார். அதன் பிறகு நவசக்தியை வார இதழாகத் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் திறம்பட நடத்தினார். இதன் பிறகு 2008-ல் காங்கிரஸ் கட்சிக்காகத் தொடங்கப்பட்ட ‘தேசிய முரசு’ மாதமிருமுறை இதழை தனது சொந்தப் பொறுப்பில் ஆசிரியராக இருந்து 8 ஆண்டுகள் தொய்வின்றி நடத்தினார் கோபண்ணா.
அதன் பிறகு, ஊடகத் துறையை விட்டு ஒதுங்கி இருந்த கோபண்ணா, கட்சி தொடர்பான அறிக்கைகள், தேர்தல் அறிக்கைகள் உள்ளிட்டவற்றைத் தயாரிப்பதில் இன்றளவும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார். இந்த நிலையில் மீண்டும் ஊடகத் துறைக்குள் தடம் பதிக்கும் கோபண்ணா, காமராஜரின் 117-வது பிறந்த நாளான வரும் ஜூலை 15-ம் தேதி ‘தேசிய முரசு டாட் காம்’ என்ற இணைய இதழைத் தொடங்குகிறார்.
இதுகுறித்து தனது நட்பு வட்டத்தினருக்குக் கடிதம் மூலம் தகவல் தெரிவித்துக்கும் கோபண்ணா, அதில் தெரிவித்திருப்பதாவது:
‘‘காங்கிரஸ் கட்சிக்கு எதிரான ஆதாரமற்ற, அவதூறுப் பிரச்சாரங்களை வகுப்புவாத சக்திகள் தொடர்ந்து சமூக ஊடகங்கள் வாயிலாகப் பரப்பி வருகின்றன. இதை எதிர்கொண்டு முறியடிக்க எத்தகைய ஆயுதத்தைப் பயன்படுத்தலாம் என நான் யோசித்தபோது எனக்கு ஆயுதமாகக் கிடைத்தது இணைய இதழை வெளியிடுவதுதான். அந்த வகையில் ‘தேசிய முரசு டாட் காம்’ என்ற இணைய இதழை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட தலைவர்கள், கட்சியின் முன்னோடிகள், செயல்வீரர்கள் ஆதரவுடன் பெருந்தலைவர் காமராஜரின் 117-வது பிறந்த நாளான ஜூலை 15 புதன்கிழமையன்று தொடங்குவது என முடிவு செய்திருக்கிறேன்.
முதலில் தேசிய முரசு இதழைத் தொடங்கும்போது எத்தகைய கனவுகளோடு தொடங்கினேனோ அதைவிடப் பன்மடங்கு கூடுதலான கனவுகளோடு ‘தேசிய முரசு டாட் காம்’ இணைய இதழைத் தொடங்கி நடத்துவது என உறுதி பூண்டிருக்கிறேன். இதன்மூலம், காங்கிரஸ் கட்சிக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்படிருக்கிற ஆதாரமற்ற அவதூறுகளையும், அரசியல் உள்நோக்கம் கொண்ட விமர்சனங்களையும் உடனுக்குடன் முறியடிக்கும் வகையில் முழுநேரப் பணியாக ஏற்றுச் சிறப்பாகச் செயல்பட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரின் தலைமையினை வலிமைப்படுத்துகிற வகையிலும் பாஜக, அதிமுக அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கைகளை மக்கள் மன்றத்தில் பரப்புரை செய்யும் வகையிலும் தமிழ்நாடு காங்கிரஸுக்கு உறுதுணையாகப் போர்வாளாகவும், கேடயமாகவும் ‘தேசிய முரசு டாட் காம்’ இணைய இதழ் பீடுநடை போட்டுச் செயல்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’.
இவ்வாறு கோபண்ணா தெரிவித்துள்ளார்.
