கலைப்பொருள் விற்பனையை முடக்கிய கரோனா: கீழ்பூனாச்சி பழங்குடிப் பெண்களின் துயரம்

கலைப்பொருள் விற்பனையை முடக்கிய கரோனா: கீழ்பூனாச்சி பழங்குடிப் பெண்களின் துயரம்
Updated on
2 min read

“ஆசை ஆசையாய் இந்த வேலையைக் கத்துக்கிட்டு, அழகழகா கலைப் பொருட்களையும் செஞ்சுவச்சுட்டோம். கரோனா வந்ததால முதல் போணியே செய்ய முடியாத நிலையில் இருக்கோம்” என்று வருத்தத்துடன் சொல்கிறார்கள் கீழ்பூனாச்சி பழங்குடி பெண்கள்.

வால்பாறை அட்டகட்டியிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் அடர் வனப்பகுதியில் இருக்கிறது கீழ்பூனாச்சி மலை கிராமம். இங்கே நாற்பதுக்கும் மேற்பட்ட புலையர் பழங்குடிகள் வசித்து வருகின்றனர். இங்கே 50 ஆண்டுகளுக்கு முன்பு கிளை பரப்பி நின்ற மரங்களை வெட்டுவதற்காகவும், அவற்றை அப்புறப்படுத்துவதற்காகவும் வனத்துறை மூலம் யானை முகாம் ஒன்று இருந்துள்ளது. மரம் வெட்டுவது, யானைகளைப் பழக்குவது, அவற்றின் மூலம் வெட்டிய மரங்களை அப்புறப்படுத்துவது போன்ற பணிகளைச் செய்துள்ளனர் இந்தக் கிராம மக்கள்.

தொடர்ந்து மர நாற்றுப் பண்ணைகள் உருவாக்கப்பட்டு, இங்கிருந்தே மர நாற்றுக்கள் பல்வேறு பகுதிகளுக்குக் கொண்டுசெல்லப்பட்டு நடப்பட்டிருக்கின்றன. இப்பகுதியில் ஏராளமான தேக்கு மர நாற்றுக்கள் நடப்பட்டு ஓங்கி வளர்ந்திருக்கின்றன. காலப்போக்கில் யானை முகாம், மரநாற்று நர்சரிகள் காலியாகிவிட்டன. யானைகளைப் பழக்கிய பாகன்கள் பலர் வால்பாறை, டாப்ஸ்லிப், முதுமலை எனப் பரவலாக வேலைக்குச் சென்றுவிட்டனர்.

எஞ்சியவர்கள் காடாம்பாறை, அட்டகட்டி, வால்பாறை சாலைகள் ஓரம் செடி, கொடிகளை அப்புறப்படுத்துவது, பக்கத்தில் உள்ள எஸ்டேட் வேலைக்குச் செல்வது, ஆழியாறு அணையில் அன்றாடக் கூலிக்குச் செல்வது என இருந்துள்ளனர். பாதி நாட்கள் வேலை கிடைக்காத நிலையில் பல பெண்கள் வருமானமின்றித் தவித்தனர். இதைப் பார்த்த ஜவ்வாது மலையில் உள்ள தன்னார்வ அமைப்பைச் சேர்ந்தவர்கள், காடுகளில் விரவிக் கிடக்கும் உண்ணிச் செடி மூலம் நாற்காலி, டீப்பாய், வீட்டு அலங்காரப் பொருட்களைச் செய்யும் கலையை ஆறு மாதங்களுக்கு முன்பு இப்பெண்களுக்கு இலவசமாகவே கற்றுக் கொடுத்துள்ளனர்.

“இந்த கலைப் பொருட்களுக்கு நல்ல மார்க்கெட் இருக்கிறது. நாங்களே இதை எடுத்துச் சென்று விற்பனையும் செய்து கொடுக்கிறோம்” என்று சொல்ல, பெண்களும் ஆர்வமாய் இதனை கற்றுத் தேர்ந்துள்ளனர். பயிற்சிக்குப் பின் கிட்டத்தட்ட 10 வகையான கலைப் பொருட்களை இவர்கள் ஒன்று கூடி செய்துள்ளனர்.

ஆனால், கரோனா பொதுமுடக்கம் காரணமாக இவை எதுவும் விற்பனையாகவில்லை என்பதுதான் இவர்களைத் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இதுகுறித்து இக்குழுவைச் சேர்ந்த புவனா கூறுகையில், “இந்த உண்ணிச் செடி காடுகளிலேயே பெரிய களைச் செடியாகும். எந்த ஒரு மரக்கன்றையும் தாவரத்தையும் வளர விடாது. முயல், மான், புலி, சிறுத்தை என வரும் வன விலங்குகளுக்கும் இடைஞ்சலானது. அவை இந்தச் செடிகளில் நுழைந்தால் சிக்கிக்கொள்ளும். அதனால் காடுகளில் வளர்ந்து நிற்கும் இந்தச் செடிகளைக் கோடை காலங்களில் வெட்டி அகற்றுமாறு வனத் துறையினர் சொல்வார்கள். இவற்றைக் களைந்து எடுத்து அகற்றுவதுதான் எங்கள் ஊரில் ஆண்களின் வேலை.

களைச் செடியைச் சுத்தப்படுத்தி, பாய்லர் போட்டு வேகவைத்துப் பக்குவப்படுத்தித்தான் இந்த நாற்காலி, மேசைகளைச் செய்ய கற்றுத் தந்தார்கள். வார்னிஷ் பூச்சு இருப்பதால் எத்தனை வருஷம் ஆனாலும் உளுத்துப் போகாது. இங்குள்ள பத்து குடும்பங்களின் மொத்த உழைப்பும் மூன்று மாதங்களாக இதில்தான் அடங்கியிருக்கிறது. ஆனால், கரோனா வரும் என்றோ, இவற்றை வாங்க ஆட்களே வரமாட்டார்கள் என்றோ நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை” என்று கவலையுடன் தெரிவித்தார்.

உலகெங்கும் காடுகளுக்கும், அதில் வாழும் வன உயிரினங்களுக்கும் பெருத்த தொல்லை தரும் களைச் செடிகளில் முக்கியமானது இந்த உண்ணிச் செடி (Lantana camara). தென் அமெரிக்காவிலிருந்து பரவிய இது இன்று ஆப்பிரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா வரை பரவியுள்ளது. இதனால் வன மிருகங்களின் மேய்ச்சல், வாழ்விடங்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு அரிய வகைத் தாவரங்களின் நிலையும், மலைவாழ் மக்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பழங்குடிகள் இந்த உண்ணிச் செடியை எளிதாகப் பிரம்பிற்கு மாற்று மூலப் பொருளாகப் பயன்படுத்தி மிக நேர்த்தியாகக் கைவினைப் பொருட்களை உருவாக்குகின்றனர்.

இந்த மாற்று மூலப்பொருளால் வனவளம் காப்பாற்றப்படுவதோடு மலைவாழ் மக்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கிறது. மூங்கில், பிரம்பு போன்றவற்றின் தேவை குறைவதால் அவற்றின் வளமும் காப்பாற்றப்படுகிறது. இதுபோன்ற மாற்றுப் பொருட்களுக்கு ஆதரவு தருவதன் மூலம் மறைமுகமாகச் சுற்றுச்சுழலையும் பாதுகாக்க முடியும்.

அதைத்தான் கீழ்பூனாச்சி பழங்குடி பெண்களும் முதன் முறையாக ஆரம்பித்துள்ளனர். அப்படி ஆரம்பித்த ஒரு கலைத்தொழில், சூழல் காக்கும் தொழில், முளைக்கும்போதே கருகி விடக்கூடாது. யாராவது உதவிசெய்ய முன்வந்தால் இந்த பழங்குடிப் பெண்கள் மேலும் ஊக்கத்துடன் கலைப் பொருட்களை உருவாக்குவார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in