கரோனா இன்றோ, நாளையோ முடியப் போவதில்லை; ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அவசியம்: புதுச்சேரி அமைச்சர் வலியுறுத்தல்
ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அவசியம் என்று புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று (ஜூலை 12) கூறியதாவது:
"இன்று காலை மார்க்கெட், கடற்கரைச் சாலை உள்ளிட்ட பல இடங்களுக்கு சைக்கிளில் சென்று பார்த்தேன். கதிர்காமம் மருத்துவமனை உள்ள வழுதாவூர் சாலையில் மிக அதிகமான கூட்டம் இருந்தது. வாரத்தில் ஒரு நாள் ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என முதல்வரிடம் 4, 5 முறை கூறிவிட்டேன்.
தமிழ்நாட்டில் என்ன செய்கிறார்களா, அதைத்தான் புதுச்சேரியிலும் கடைப்பிடிக்கிறோம். கர்நாடகாவில் நேற்று முதல் ஊரங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், தமிழகத்திலும் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்ளது. எனவே, புதுச்சேரியிலும் வாரத்தில் ஒரு நாள் ஊரடங்கை அமல்படுத்துவது நல்லது என்றேன்.
2 நாட்களுக்கு முன்பு கூட முதல்வரிடம் கூறியபோது ஞாயிற்றுக்கிழமை (இன்று) முகூர்த்த நாள் என்பதால் மறுத்துவிட்டார். இதனால் அடுத்த ஞாயிற்றுக்கிழமையாவது ஊரடங்கை அமல்படுத்த வேண்டும். பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வது தவறில்லை. ஆனால், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பதில்லை.
முதியோர் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. எனவே, குடும்பத்தில் உள்ளவர்களுடன் முதியோர் ஒன்றாக இருக்கக் கூடாது. தனியாகவே இருக்க வேண்டும். அனைத்து மாநிலங்களிலும் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால், தினமும் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே செல்கிறது.
பொதுமக்கள் மத்தியில் ஒத்துழைப்பு இல்லையென்றால் இதே மாதிரிதான் இருக்கும். கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் 600 படுக்கை வசதிகள் உள்ளன. தற்போது 400 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். நம்மிடம் அரசு மருத்துவக் கல்லூரி, ஜிப்மர் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. ஆனால், இதே மாதிரி தொற்று அதிகரித்தால் பொது நோயாளிகளுக்குப் பாதிப்பு ஏற்படும்.
எனவே, பொதுமக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். குறைந்தபட்சம் 6 அடி அளவுக்கு தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். அடிக்கடி கைகளைக் கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். முடிந்தவரை வீட்டிலேயே இருங்கள். மருத்துவர்கள், செவிலியர்கள் மட்டுமல்ல, கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் அனைத்து ஊழியர்களுக்கும் காப்பீடு உள்ளது என்று மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது.
எனவே, யாரும் அச்சப்பட வேண்டும். கரோனா பிரச்சினை இன்றோ, நாளையோ முடியப் போவதில்லை. சில மாதங்களுக்கு இப்பிரச்சினை இருக்கும். அனைவரது ஒத்துழைப்பும் இருந்தால் கரோனா தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும்".
இவ்வாறு அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.
