

உரிய விளக்கம் அளிக்காததால் எம்எல்ஏ தனவேலு தகுதி நீக்கம் செய்யப்பட்டார் என்று சபாநாயகர் சிவக்கொழுந்து விளக்கம் அளித்துள்ளார்.
ஆட்சிக்கு எதிராகச் செயல்பட்டதாக காங்கிரஸ் எம்எல்ஏ தனவேலுவை சட்டப்பேரவை உறுப்பினர் பதவியிலிருந்து சபாநாயகர் சிவக்கொழுந்து தகுதி நீக்கம் செய்து நேற்று (ஜூலை 10) உத்தரவிட்டார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தனவேலு ஆதாரவாளர்கள் இன்று (ஜூலை 11) கருப்புக்கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பாகூர் பகுதி முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன.
இந்நிலையில், பாகூர் சட்டப்பேரவை உறுப்பினர் தனவேலு ஆட்சிக்கும், அரசுக்கும் எதிராகச் செயல்பட்டது குறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது எனவும், உரிய விளக்கம் அளிக்காததால் அவர் மீது கட்சித்தாவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் சபாநாயகர் சிவக்கொழுந்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று (ஜூலை 11) சட்டப்பேரவை வளாகத்தில் சபாநாயகர் சிவக்கொழுந்து செய்தியாளர்களிடம் கூறும்போது, "பாகூர் சட்டப்பேரவை உறுப்பினர் தனவேலு அரசுக்கு எதிராகவும், ஆட்சிக்கு எதிராகவும் உண்மைக்குப் புறம்பான செய்திகளை பரப்பி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதுச்சேரி அரசு கொறடா அனந்தராமன் இரண்டு முறை என்னிடம் மனு கொடுத்தார். அதை நான் பரிசீலனை செய்து, தனவேலுவை அழைத்து விளக்கம் கேட்டேன். உரிய விளக்கம் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.
அரசியலமைப்புச் சட்டத்தை ஆராய்ந்து, வழக்கறிஞர்களுடனும் பரிசீலனை செய்தேன். தற்போது இதனை நிறைவேற்றும் காலகட்டத்துக்கு வந்ததால் முறைப்படி அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இது சம்பந்தமான கடிதம் அவருக்கும் அனுப்பப்பட்டது. மேலும், பாகூர் சட்டப்பேரவை தொகுதி காலியானதாக தேர்தல் துறைக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.