

விருதுநகர் மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கரோனா சிகிச்சையளிக்கப் போதிய அளவில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களைப் பணியமர்த்த வேண்டும் என மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறியிருக்கிறார்.
விருதுநகர் எம்.பி.யான மாணிக்கம் தாகூர் இதுதொடர்பாக இன்று தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
’’தென் மாவட்டங்களில் மிகப்பெரிய அளவில் கரோனா தொற்று நோய், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, விருதுநகரில் ஜூலை முதல் தேதி வெறும் 538 ஆக இருந்த நோயாளிகள் எண்ணிக்கை தற்போது 1,595 ஆக உயர்ந்துவிட்டது. விருதுநகரில் தொற்று எண்ணிக்கை, 9 நாட்களில் மூன்று மடங்காக உயர்ந்திருப்பது அதிர்ச்சிகரமான விஷயம் ஆகும். இதேபோல் சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்களிலும் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் கரோனா பரிசோதனைக்காக எடுக்கப்படும் மாதிரிகள், தேனி, திருநெல்வேலி, சிவகங்கை ஆகிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படுகின்றன. இதனால் முடிவுகள் தெரிவதற்கு 5 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு இடைப்பட்ட காலத்தில், பரிசோதனை செய்தவர்கள் வெளியில் சென்று வருவதால், மற்றவருக்கும் தொற்றுப் பரவும் சூழ்நிலை உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் தற்போது நோய் வேகமாகப் பரவுவதற்கு இதுவே காரணமாகத் தெரியவருகிறது.
இதுகுறித்து டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவமனை அலுவலகத்தில் ஐசிஎம்ஆர் டைரக்டர் ஜெனரல் பல்ராம் பார்கவாவைச் சந்தித்து ராபிட் ஆன்டிஜன் டெஸ்ட் கருவியை உடனடியாகத் தமிழ்நாட்டிற்கும் குறிப்பாக, மதுரை மற்றும் விருதுநகர் உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கும் வழங்குமாறு கேட்டுக்கொண்டேன். அதன் அடிப்படையில் ஐஎம்சிஆர் அனுமதியும் அளித்தது. எனவே, தமிழக முதல்வர் கவனம் செலுத்தி ராபிட் ஆன்டிஜென் டெஸ்ட் கருவியை விரைவில் வாங்க வேண்டும்.
விருதுநகர் மாவட்டத்தில் தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் குறைவாக உள்ளனர். ஏற்கெனவே இந்த மாவட்டத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்கள் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டுவிட்டார்கள். நிலைமையைச் சமாளிக்க மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் தற்காலிகப் பணியாளர்களாகப் பணிபுரிய விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
எனவே, தமிழக முதல்வர் தனி கவனம் செலுத்தி, விருதுநகர் மாவட்டத்துக்குத் தேவையான மருத்துவப் பணியாளர்களை நியமிக்கவும், ராபிட் ஆன்டிஜென் டெஸ்ட் கருவியை உடனடியாக வாங்கிப் பரிசோதனை எண்ணிக்கையை அதிகப்படுத்தவும் வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’’.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.