சாத்தான்குளம் விவகாரம்: விமானம் மூலம் மதுரை வந்த சிபிஐ அதிகாரிகள் குழு- தூத்துக்குடியில் விசாரணையை தொடங்கியது 

சாத்தான்குளம் விவகாரம்: விமானம் மூலம் மதுரை வந்த சிபிஐ அதிகாரிகள் குழு- தூத்துக்குடியில் விசாரணையை தொடங்கியது 
Updated on
1 min read

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் சிபிஐ-யின் கூடுதல் டிஎஸ்பி சுக்லா தலைமையில் அதிகாரிகள் குழு இன்று விமானம் மூலம் மதுரை வந்தது. கார் மூலம் தூத்துக்குடி சென்ற அக்குழுவினர் விசாரணையைத் தொடங்கினர்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் கடந்த 19-ம் தேதி போலீஸார் தாக்கியதில் தந்தை, மகன் உயிரிழந்ததாக கூறும் சம்பவத்தை சிபிசிஐடி போலீஸார் விசாரித்தனர். இது தொடர்பாக சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்ஐக்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், சிறப்பு எஸ்ஐ பால்துரை உட்பட 10 காவலர்கள் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தமிழக முதல்வரின் கோரிக்கையை தொடர்ந்து, இவ்வழக்கை சிபிஐ விசாரிக்க மத்திய அரசு இரு தினங்களுக்கு முன்பு ஒப்புதல் வழங்கியது. இதைத்தொடர்ந்து வழக்கிற்கு விசாரணை அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

இவர்கள் தூத்துக்குடிக்கு சென்று சிபிசிஐடியிடம் இருந்து ஆவணங்களை பெற்று, இன்று விசாரணையைத் தொடங்க திட்டமிட்டனர். இதற்காக கூடுதல் டிஎஸ்பி விஜயகுமார் சுக்லா தலைமையில் அனுராக்ஸ் சிங், பவன்குமார் திவேதி, கைலாஷ் குமார், சுசில்குமார் வர்மா, அஜய் குமார், சச்சின் பூனம் குமார் ஆகிய 6 பேர் கொண்ட சிபிஐ விசாரணை குழு இன்று மதியம் ஒன்றரை மணிக்கு டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தது.

விமான நிலையத்தில் இருந்து அவர்கள் 3 கார்களில் தூத்துக்குடிக்கு புறப்பட்டுச் சென்றனர். சிபிசிஐடி ஐஜி சங்கர் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்தனர்.

வழக்கின் விவரங்கள் சேகரித்து, பிறகு தங்களது விசாரணையைத் தொடங்கியுள்ளனர். சிபிஐ குழு வருகையால் தூத்துக்குடி மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in