சாகுபடிக்கு தண்ணீர் திறக்கக் கோரி கன்னடியன் கால்வாயில் விவசாயிகள் குடியேறும் போராட்டம்

சாகுபடிக்கு தண்ணீர் திறக்கக் கோரி கன்னடியன் கால்வாயில் விவசாயிகள் குடியேறும் போராட்டம்
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டத்தில் கார் சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி கன்னடியன் கால்வாயில் குடியேறும் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கார் சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் முதல் வாரத்தில் பாபநாசம் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும். ஆனால் இவ்வாண்டு இதுவரை தண்ணீர் திறக்கப்படவில்லை.

இந்நிலையில் கன்னடியன் கால்வாய் மூலம்10 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யும் விவசாயிகள் கால்வாயில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி கடந்த மாதத்தில் 4 கட்டமாக போராட்டங்கள் நடத்தியிருந்தனர்.

அதிகாரிகளுக்கு மனுக்களையும் அனுப்பியிருந்தனர். ஆனாலும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் கால்வாயில் குடியேறும் போராட்டத்தை நடத்த கடந்த 1-ம் தேதி நடைபெற்ற கன்னடியன் கால்வாய் பாசன விவசாயிகள் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி கால்வாயில் குடியேறும் போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று ஈடுபட்டனர். இதையடுத்து பொதுப்பணித்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் அங்குவந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஒரு வார காலத்தில் பாபநாசம் அணையிலிருந்து கால்வாயில் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி தெரிவித்ததை அடுத்து 2 மணிநேரம் நீடித்த போராட்டம் முடிவுக்கு வந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in