கிரண்பேடி ராஜினாமா செய்தால் நான் தேர்தலில் போட்டியிட மாட்டேன்; அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் 

அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்: கோப்புப்படம்
அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்: கோப்புப்படம்
Updated on
2 min read

கிரண்பேடி பதவியை ராஜினாமா செய்தால் தான் நானும் ராஜினாமா செய்ய தயார், தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று (ஜூலை 7) செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"புதுச்சேரியில் 23-க்கும் அதிகமான ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளனர். ஆனாலும் இரண்டு ஆண்டுகளாக துணைநிலை ஆளுநர் செயலாளர் பதவி நிரப்பப்படாமல் காலியாகவே உள்ளது. துணைநிலை ஆளுநர் கிரண்பேடி சிறப்பு அதிகாரி (ஓஎஸ்டி) பதவியை உருவாக்கினார். அதை ஆலோசகர் என நியமித்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. அப்பதவிக்கு மாதம் ஒரு லட்சத்துக்கும் அதிகமாக ஊதியம் கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த 30 ஆம் தேதி அவரின் பதவிக்காலம் முடிந்தது. இதனையடுத்து, புதுச்சேரி அமைச்சரவை மூலமோ, அதிகாரிகள் மூலமோ மத்திய அரசுக்கு எதையும் துணைநிலை ஆளுநர் பரிந்துரை செய்யவில்லை. கிரண்பேடியே நேராக மத்திய அரசுக்கு மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கக் கோரி கோப்பு அனுப்பி, அனுமதியும் பெற்றுள்ளார். ஓஎஸ்டி பதவி இல்லை என்றால் அவர் அமரும் இடத்தில் ஒரு ஐஏஎஸ் அதிகாரி உட்காருவார். அவர் அமைச்சரவை கூட்டங்களுக்கும் வருவார்.

ஆனால், தற்போது அமைச்சரவை கூட்டத்துக்கு ஆளுநர் சார்பாக அவரின் செயலாளர் வந்தது இல்லை. அனைத்து பதவிகளையும் நிரப்ப வேண்டும் என்று கூறும் துணைநிலை ஆளுநர் அவரின் செயலாளர் பதவியை நிரப்பாதது ஏன்? ராஜ்நிவாஸில் கிரண்பேடிக்கு வலது, இடது கையாக ஒரு பெண் அதிகாரியும், ஒரு ஆண் நபரும் உள்ளனர். அவர்களது வசூல் கோடிக்கு மேல் சென்றுவிட்டது. அவர்கள் மீது சிபிஐ விசாரணை நடத்த கிரண்பேடி புகார் அனுப்ப வேண்டும்.

புதுச்சேரியில் இருந்து சென்னை செல்லும் பிஆர்டிசி வால்வோ பேருந்தை கிரண்பேடி ஆய்வுக்காக எடுத்துச்சென்றார். எத்தனை முறை பயன்படுத்தப்பட்டது என்று ராஜ்நிவாஸில் தகவல் கேட்டால் தொலைந்துவிட்டதாக கூறுகின்றனர். பிஆர்டிசியில் கேட்டால் எத்தனை முறை எடுத்துச் சென்றனர் என்ற தகவலை கூறியதுடன், அதற்கான பணத்தை இன்றுவரை கொடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

அதுபோல் சிஎஸ்ஆர் நிதி குறித்த கேள்விக்கு பதிவு புத்தகத்தை பார்த்துக் கொள்ள கூறிவிட்டனர். அதில் சத்யபாமா கல்லூரி கொடுத்த ரூ.6 லட்சம் மட்டுமே இடம் பெற்றுள்ளது. அத்துடன் பல்வேறு நிறுவனங்கள், கல்லூரிகளும் ராஜ்நிவாஸுக்கு சிஎஸ்ஆர் நிதி கொடுத்துள்ளன. கிரண்பேடி வந்த பின்னர் ஆளுநர் மாளிகையின் செலவு இரண்டு மடங்காகிவிட்டது. அத்துடன் சிஎஸ்ஆர் நிதியும் சேர்த்தால் மேலும் அதிகமாக இருக்கும்.

கிரண்பேடி கள ஆய்வு செல்வதை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து கொடுப்பதற்காக ஒருவரை நியமித்துள்ளார். போட்டோ ஷூட்டிங் எடுப்பதற்கு மட்டும் மாதம் ரூ.5 லட்சம் செலவாகின்றது. நான் 31 ஆண்டுகள் அரசியலில் உள்ளேன். கரை படியாத வெள்ளை காகிதமாகத்தான் உள்ளேன். புதுச்சேரியில் 2 ஆண்டுகளுக்கு மேல் துணைநிலை ஆளுநர் பதவியில் இருக்க மாட்டேன் என்று கிரண்பேடி கூறினார். இன்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்தால், நானும் ராஜினாமா செய்வேன். மீண்டும் தேர்தலில் போட்டியிட மாட்டேன்.

கிரண்பேடி: கோப்புப்படம்
கிரண்பேடி: கோப்புப்படம்

பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருக்கு தவறான தகவல்களை எழுதி வருகின்றார். ஏனாமில் ஊரடங்கு காலத்தில் மது விற்றதாக அனைத்து கடைகளையும் மூடிவிட்டார். அதை அறிய அமைக்கப்பட்ட குழுவும் எதையும் கண்டுபிடிக்கவில்லை. ஆனாலும் கடைகளை திறக்க அனுமதி தரவில்லை. இதனால் கூட்டுறவு கடை மற்றும் தனியார் மதுபான கடைகளில் ரூ.1 கோடி மதுக்கள் காலாவதி ஆகிவிட்டது. இதற்கு யார் பொறுப்பாவார்கள்?

பிரதமர், நிதி அமைச்சர், உள்துறை அமைச்சரை சந்தித்து ஒரு ரூபாய் நிதி கிரண்பேடி பெற்று வந்துள்ளாரா? காங்கிரஸ் மட்டுமல்லாமல் எந்த அரசியல் கட்சியை சேர்ந்த ஒருவராவது கிரண்பேடி நல்லது செய்வதாக கூறுவார்களா? கிரண்பேடி இருந்தால் 100 ஆண்டு ஆனாலும் புதுச்சேரியில் பாஜக வராது. உள்ளூர் பாஜகவின் செயல்பாடும் கிரண்பேடியால் கீழே போகின்றது.

பட்ஜெட் தாமதமாவதற்கு முக்கிய காரணம் துணைநிலை ஆளுநர் தான். மத்திய அரசுக்கு அனுப்புவதற்கு முன்பு 10, 15 நாட்கள் ஆளுநர் மாளிகையிலேயே கோப்பு இருந்தது. இதனால் ஜூலை 1 முதல் அரசால் ஒரு பைசா செலவிட முடியவில்லை. முதியோர் ஓய்வூதியம் தரமுடியவில்லை. கிரண்பேடி நடத்தும் தொண்டு நிறுவனம் மூலம் ஒரு பைசா செலவு செய்யப்பட்டுள்ளதா? அவருடைய மகள் நடத்தும் தொண்டு நிறுவனத்துக்கு என்னென்ன போகின்றது என்பது தெரியும்.

7 பிரச்சினைகளில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை எதிர்த்து நீதிமன்றம் செல்ல உள்ளேன். இந்த அரசு இருக்கக் கூடாது, புதுச்சேரி மக்களுக்கு எதுவும் நடக்கக் கூடாது என்பதுதான் கிரண்பேடியின் எண்ணம். தேர்தலில் தோல்வி அடைந்தவர், 4 மாதமாக பொதுமக்களை சென்று பார்க்க முடியவில்லை, தான் வேலை செய்வதாக வெளிமாநில மக்களுக்குக் காட்டிக்கொள்ள இதுபோல் செயல்படுகின்றார். பாஜகவுக்கு எதிரானவர்.

இடைத்தேர்தல், நாடாளுமன்ற தேர்தல்களில் மக்கள் தீர்ப்பில் பார்த்தாகிவிட்டது. முதல்வர், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் கடினமாக உழைத்து, ஆளுநரால் புதுச்சேரியின் வளர்ச்சி 20 ஆண்டு பின்சென்று விட்டது. யார் ஆட்சிக்கு வந்தாலும் அதை சரிசெய்வது கஷ்டம்"

இவ்வாறு மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in