புதுச்சேரியில் மேலும் 32 பேருக்கு கரோனா தொற்று உறுதி; பாதிப்பு எண்ணிக்கை 1,041 ஆக உயர்வு

அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்: கோப்புப்படம்
அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்: கோப்புப்படம்
Updated on
1 min read

புதுச்சேரியில் இன்று புதிதாக 32 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,041 ஆக உயர்ந்துள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இன்று (ஜூலை 7) 32 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,041 ஆகவும், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 510 ஆகவும் அதிகரித்துள்ளது. இதுவரை 517 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று (ஜூலை 7) கூறியதாவது:

"புதுச்சேரி மாநிலத்தில் 498 பேருக்குப் பரிசோதனை செய்ததில் தற்போது புதுச்சேரியில் 31 பேர், மாஹே பிராந்தியத்தில் ஒருவர் என மொத்தம் 32 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் ஆண்கள் 20 பேர், பெண்கள் 28 பேர் ஆவர்.

இதன் மூலம் புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 1,041 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் தற்போது கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் 323 பேர், ஜிப்மரில் 123 பேர், 'கோவிட் கேர் சென்ட'ரில் 31 பேர், காரைக்காலில் 8 பேர், ஏனாமில் 14 பேர், மாஹேவில் 9 பேர், பிற பகுதியில் 2 பேர் என மொத்தம் 510 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று மட்டும் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் 23 பேர், ஜிப்மரில் 12 பேர், காரைக்காலில் ஒருவர், மாஹேவில் ஒருவர் என மொத்தம் 37 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 517 ஆக அதிகரித்துள்ளது. 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை 21 ஆயிரத்து 382 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 19 ஆயிரத்து 996 பரிசோதனைகள் 'நெகட்டிவ்' என்று வந்துள்ளது. 295 பரிசோதனைகள் முடிவுக்காகக் காத்திருப்பில் உள்ளன. தினமும், 30, 40 பேருக்கு 'பாசிட்டிவ்' கண்டறியப்படுகிறது. இந்த ஜூலை மாதம் தொற்றின் தாக்கம் கடுமையாக இருக்கும்.

அதற்காக அனைத்து தனியார் மருத்துவக் கல்லூரிகளும் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தேவையான மருத்துவ உபகரணங்கள் வாங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்களும் ஒத்துழைப்பு அளிப்பதாகத் தெரிவித்துள்ளனர்".

இவ்வாறு அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in