

மதுரை நகரில் கரோனா தொற்று அதிகரிப்பை கருத்தில் கொண்டு, உடல் நலம் குன்றிய 7 வயதிற்கு மேற்பட்ட காவல்துறையினருக்கு ஓய்வளிக்கும் நடவடிக்கையை புதிய காவல் துறை ஆணையர் பிரேமானந்த் சின்ஹா மேற்கொண்டார்.
இதையொட்டி, நகரிலுள்ள 24 காவல் நிலையங்களிலும் பணிபுரியும் 57 வயதுக்கு மேற்பட்டோர் பட்டியல் தயாரிக்கப்பட்டது. 2 காவல் ஆய்வாளர்கள், 1 ஆயுதப்படை ஆய்வாளர், 71 காவல் சிறப்பு உதவி ஆய்வாளர்கள், 22 காவல் உதவி ஆய்வாளர்கள், 3 தலைமைக் காவலர்கள் என, 99 பேர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
இவர்களில் யாருக்கெல்லாம் உடல்நலம் சரி யில்லையோ அவர்களை தேர்வு செய்து, உரிய மருத்துவ சிகிச்சை, தேவையான ஓய்வளிக்க அந்தந்த காவல் நிலைய ஆய்வாளர்கள் நட வடிக்கை எடுக்கவேண்டும் என, காவல் ஆணையர் உத்தரவிட்டார்.
இத்திட்டத்தின்படி, 57 வயதுக்கு மேற்பட்ட 99 பேரில் உடல்நலம் பாதிக்கப்பட்ட 2 காவல் ஆய்வாளர்கள், 5 காவல் உதவி ஆய்வாளர் கள், 38 சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள், 24 காவலர்கள் என, 60 பேருக்கு ஆயுதப்படை பகுதியிலுள்ள காவலர் நல மருத்துவ மையத்தில் இன்று மருத்துவர் கீதா தலைமையில் கரோனா பரிசோதனை மற்றும் முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டது.
தொற்று பாதிப்பு மற்றும் உடல் நலம் பாதிப்பை பொறுத்து, அவர்களுக்கு ஓய்வளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மருத்துவர் கீதா கூறுகையில், ‘‘ 60 பேருக்கு கரோனாவுக்கான பரிசோதனை, பிற மருத்துவ சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. 3 நாட்களுக்குப் பின், இதற்கான முடிவு தெரியும். கரோனா தொற்று இல்லாவிடினும், பிற பாதிப்பால் ஓய்வு தேவைப்படும் பட்சத்தில் அவர்கள் ஓய்வெடுக்க பரிந்துரைக்கப்படும்.
ஓய்வுக்கு அனுமதிக்கப்படுவர் வீட்டிலேயே தனிமைப் படுத்தி கொள்ளவேண்டும். தேவையின்றி வெளியே செல்லக்கூடாது, என்றார். காவல் ஆணையரின் இந்த நடவடிக்கை மதுரை நகர் காவல்துறை மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.