

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா நோய்த்தடுப்பு குறித்து விளக்கம் கோரி ஆட்சியரிடம் திமுக எம்எல்ஏக்கள் மனு அளித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பிரபாகரிடம், திமுக எம்எல்ஏக்கள் செங்குட்டுவன், பிரகாஷ், வேப்பனப்பள்ளி முருகன், சத்யா ஆகிய 4 பேரும், கரோனா நோய்த்தடுப்பு குறித்து விளக்கம் கோரி இன்று (ஜூலை 6) மனு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து எம்எல்ஏக்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"சுமார் 17 லட்சம் மக்கள் உள்ள இம்மாவட்டத்தில், கரோனா தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், சோதனைகள், எவ்வளவு படுக்கைகள் உள்ளன, எவ்வளவு மருத்துவர்கள் உள்ளனர், எவ்வளவு பிசிஆர் கிட்டுகள் வந்தன, யாருக்கெல்லாம் அது பயன்படுத்தப்பட்டது, யாரெல்லாம் அதில் இருந்து குணமாகி வெளியே போனார்கள், எத்தனை பேர் இறந்தார்கள் என்கிற எந்த விவரமும் எங்களுக்கும் தெரியவில்லை, பொதுமக்களுக்கும் தெரியவில்லை.
மாவட்டத்தில் கரோனா தொற்று மிக வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. மக்கள் மிகவும் அச்சத்துடன் உள்ளனர். மாவட்ட நிர்வாகத்தின் பணிகள் அறவே முடங்கிப் போய் இருப்பதாகவே நாங்கள் கருதுகிறோம்.
கரோனா தொற்று அதிகம் பரவுவதே, வெளி மாவட்டம், வெளி மாநிலம், வெளி நாடுகளில் இருந்து வருவபவர்களால்தான். எனவே, அவ்வாறு வருபவர்களை சோதனைச்சாவடிகளில் தடுத்து நிறுத்தி, அவர்களைத் தனிமைப்படுத்தி இருந்தாலே இந்தத் தொற்றைக் குறைத்திருக்க முடியும். எனவே, சரியான முறையில் சோதனை நடத்தாத காரணத்தால் தொற்று நாளுக்கு நாள் பரவிக் கொண்டே இருக்கிறது.
ஆகவே தான் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 32 கேள்விகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கச் சொன்னார். அந்தக் கேள்விகளை வரிசைப்படுத்தி இன்று மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்துள்ளோம். அத்துடன் நாங்கள் 4 எம்எல்ஏக்களும் மாவட்ட ஆட்சியரிடம் தொற்றைத் தடுக்க வேண்டுமென்றால் என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் எடுத்துக் கூறினோம்.
அதன்படி, தினந்தோறும் சோதனை செய்ய வேண்டும். அதில் தொற்றுள்ளவர்களைத் தனிமைப்படுத்த வேண்டும். அவ்வாறு தனிமைப்படுத்தினால்தான் இந்த மாவட்ட மக்கள் ஒரு சகஜ நிலைக்கு வருவார்கள். தற்போது எதிர்கால வாழ்வாதாரத்திற்குக்கூட வழியில்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நாங்கள் எடுத்துச் சொன்னோம்".
இவ்வாறு திமுக எம்எல்ஏக்கள் கூறினர்.