

மதுரை சரக டிஐஜியாக கடந்த ஓராண்டுக்கு முன், ஆனிவிஜயா நியமிக்கப்பட்டார். 39 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றத்தின்போது, அவரும் திருச்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
இவருக்குp பதிலாக பதவி உயர்வு மூலம் சென்னை பூக்கடை பஜார் துணை ஆணையர் ராஜேந்திரன் மதுரை சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று அவர் பொறுப்பேற்றார்.
இவர் 1998-ல் நேரடி டிஎஸ்பியாக பணியில் சேர்ந்துள்ளார். சாத்தூரில் டிஎஸ்பி, மதுரை நகர் உதவி ஆணையர் மற்றும் 2006-2007-ல் விருதுநகர் மாவட்டத்தில் கூடுதல் டிஎஸ்பியாகவும் பணியாற்றியுள்ளார்.
2006-ல் தான் இவருக்கு ஐபிஎஸ் அந்தஸ்து கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து சென்னையில் துணை ஆணையராக இருந்துள்ளார்.
அவர் கூறும்போது, ‘‘ மதுரை உட்பட விருதுநகர், சாத்தூரில் பணிபுரிந்தாலும் நீண்ட நாளுக்கு பிறகு மீண்டும் வந்துள்ளேன். மதுரை சரகத்துக்கு உட்பட எஸ்பிக்கள் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்துவிட்டு, சட்டம், ஒழுங்கு மற்றும் குற்றத் தடுப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
மதுரை காவல் சரகத்தில் என்ன பிரச்சினையாக இருந்தாலும் பொதுமக்கள் தனது நேரடி கவனத்துக்கு கொண்டு வந்தால் அதிகாரிகள் மூலம் உரிய தீர்வு காணப்படும்,’’ என்றார்.