

கரோனா சூழலில் தனியார் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை அச்சுறுத்தி வரும் நிலையில், கடனுக்கான மாதத் தவணை வசூலிப்பதை மேலும் 3 மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கரோனா வைரஸ் தொற்று
கரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் தமிழகத்தில் ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. கரோனா அச்சம் மற்றும் கடும் கட்டுப்பாடுகள் காரணமாக பல்வேறு தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து இன்றளவும் செய்வதறியாது தவித்து வருகின்றனர். வருமானமின்றித் தங்கள் அடிப்படைத் தேவைகளையே பூர்த்தி செய்துகொள்ள முடியாத சூழ்நிலையில், வாங்கிய கடனுக்கான மாதத் தவணையைச் செலுத்த வேண்டிய நிர்பந்தம் ஏழை, எளிய மக்களைக் கடும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.
இதைக் கருத்தில் கொண்டு அனைத்து வகையான கடனுக்குமான மார்ச், ஏப்ரல், மற்றும் மே மாதத் தவணைகளை செலுத்தத் தேவையில்லை என்று ரிசர்வ் வங்கி ஏற்கெனவே அறிவித்தது. இந்த அறிவிப்பு, வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் ஏழை மக்களுக்கு மாதாந்திரக் கடன் தவணை செலுத்தும் சுமையிலிருந்து தற்காலிகத் தீர்வளித்தது. கடனுக்கான மாதத் தவணையை மேலும் 3 மாதங்களுக்கு ஒத்தி வைக்கவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மாதத் தவணை
இந்நிலையில் தனியார் வங்கிகள் மற்றும் வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களில் கடன் பெற்றவர்களுக்கு ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பால் இன்னும் பயன் கிடைக்கவில்லை. மாதந்தோறும் வாடிக்கையாளர்களுக்குக் கடன் தொகைக்கான தவணைத் தொகையைச் செலுத்துமாறு குறுந்தகவல் அனுப்புவது, தொலைபேசியில் அழைத்து நினைவூட்டுவது, அவர்களுக்கு வங்கிக் கணக்கில் இருந்து மாதத் தவணையைப் பிடித்தம் செய்து கொள்வது, வங்கிக் கணக்கில் போதிய பண இருப்பு இல்லாதவர்களுக்கு அபராதம் விதிப்பது போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து வருவதாகப் புகார் தெரிவிக்கின்றனர், பாதிக்கப்பட்டவர்கள்.
இந்நடவடிக்கை தொடரவே, ரிசர்வ் வங்கியின் அறிவிப்பை ஆதாரமாகக் காண்பித்து கோவையில் முன்னணி தனியார் நிதி நிறுவனத்தைச் சமீபத்தில் வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். இதில் காவல்துறையினர் தலையிட்டு வாடிக்கையாளர்களைச் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இருப்பினும் வாடிக்கையாளர்களுக்குத் தனியார் வங்கிகள் மற்றும் நுண் நிதி நிறுவனங்களால் பிரச்சினைகள் இன்றளவும் தீர்க்கப்படவில்லை என்று கோவை மாவட்ட ஆட்சியருக்குத் தொடர்ச்சியாகப் புகார்கள் சென்ற வண்ணம் உள்ளன.
இதுகுறித்து கோவை சீனிவாசநகரைச் சேர்ந்த லோகநாதன் என்பவர் கூறுகையில், ''ரிசர்வ் வங்கி அறிவிப்பின்படி அனைத்து வகையான கடன் தவணைகளும் 3 மாதங்களுக்குத் தானாக ஒத்திவைக்கப்பட்டிருக்க வேண்டும். ரிசர்வ் வங்கி அறிவித்த சலுகை தங்களுக்குத் தேவையில்லை என்றும், கடன் தவணையைத் தொடர்ந்து செலுத்துவதாகவும் எவரேனும் கடிதம் கொடுத்தால் அவர்களிடம் மட்டும்தான் கடன் தவணை தொடர்ந்து வசூலிக்கப்பட வேண்டும்.
பெரும்பான்மையான பொதுத்துறை வங்கிகள் இந்த நடைமுறையையே பின்பற்றுவதாக நிதி ஆலோசர்கள் மூலம் அறியப் பெற்றோம். ஆனால், தனியார் வங்கிகளும், நிதி நிறுவனங்களும் இதைப் பின்பற்றாமல் அனைத்துத் தவணைகளையும் செலுத்தும்படி கட்டாயப்படுத்துகின்றன. இதனால் கடன் பெற்ற ஏழை மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நெருக்கடியில் வாடிக்கையாளர்கள்
ஏழைகள், பணக்காரர்கள் என்ற இரு தரப்பினருக்கும் தேவை என்பது பொதுவாகவே உள்ளது. வருமானத்தைக் காட்டிலும் தேவைகள் அதிகரிக்கும்போது வங்கிக் கடன் மூலமாக இடம், வீடு வாங்குதல், வீடு கட்டுதல், வாகனம் வாங்குதல், நகைக் கடன் பெறுதல், நிதி நிறுவனங்கள் மூலமாக வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குதல் என தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுகிறோம். இவற்றிற்கான கடன் தொகையை மாதத் தவணை மூலமாகச் செலுத்துகிறோம்.
கரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாகப் பிறப்பித்த ஊரடங்கு உத்தரவு காரணமாக ஏற்கெனவே பலர் வேலைவாய்ப்பின்றித் தவித்து வருகின்றனர். தற்போது அதிகரித்து வரும் கரோனா தொற்று காரணமாக பல இடங்களில் வேலையாட்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதால், இன்றளவும் பலர் வேலைவாய்ப்பின்றித் தவித்து வருகின்றனர். இச்சூழலில் குடும்பத்தைக் காப்பாற்றவே வழியில்லாத நிலையில், தனியார் வங்கிகளும், நிதி நிறுவனங்களுக்கு மாதத் தவணை கேட்டு நெருக்கடி கொடுப்பது சுமையை மேலும் அதிகரித்து வருகிறது.
வங்கிக் கணக்குகளில் பணம் இல்லாத கடன்தாரர்களைக் கடன் தவணை செலுத்தத் தவறிவிட்டதாக அறிவித்து, அவர்களைக் கடன் வசூல் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் தினமும் தொலைபேசியில் அழைத்து நெருக்கடி கொடுக்கின்றனர். இது கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது. இப்பிரச்சினையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டுத் தீர்வு காண வேண்டும். தவணைக் காலத்தை நீட்டிப்பதுடன், கூடுதல் வட்டி விதிப்பதையும் தடுக்க வேண்டும்” என்றார்.
கோவை ஆட்சியர் உத்தரவு
இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி வெளியிட்டுள்ள உத்தரவில், ''கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக மக்கள் சந்தித்து வரும் இடர்ப்பாடுகளைக் கருத்தில் கொண்டு, பொதுமக்கள் வங்கிகளில் இருந்த பெற்ற கடனுக்கான மாதத் தவணையை 3 மாதங்களுக்கு ஒத்தி வைக்க ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இதன்படி ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை வாடிக்கையாளர்களிடம் இருந்து மாதத் தவணை வசூலிப்பதை ஒத்தி வைக்குமாறு கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் வங்கிகள் மற்றும் நுண் நிதி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாதத் தவணையைச் செலுத்தக்கோரி வாடிக்கையாளர்களின் வீட்டிற்கு நேரில் சென்று வசூலிக்க முயன்றாலோ, கெடுபிடி செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதே நேரத்தில் கடன் தொகையைச் செலுத்த வாய்ப்புள்ளவர்கள், வழக்கம்போல் தங்களுடைய தவணைத் தொகையைச் செலுத்தலாம்'' என்று கூறப்பட்டுள்ளது.