

புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை அனுமதி பெற்ற பின்னரே நடத்த வேண்டும் என்று அம்மாவட்ட ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
கரோனா பரவலைத் தடுப்பதற்காக திருமணம், காதணி விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் தனிமனித இடைவெளியைப் பின்பற்றி 50 பேர் வரை மட்டுமே கலந்துகொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
எனினும், புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறும் அத்தகைய நிகழ்ச்சிகளில் அரசு நிர்ணயித்த எண்ணிக்கையைவிட அதிகமானோர் பங்கேற்று வருவதோடு, தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிதல், கிருமிநாசினி பயன்பாடு போன்ற நடவடிக்கைகளை அறவே பின்பற்றுவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.
இதற்கிடையில் நாளுக்கு நாள் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று (ஜூன்29) ஒரே நாளில் 36 பேர் பாதிக்கப்பட்டனர். இதனால், புதுக்கோட்டை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 167 ஆக உயர்ந்தது. மேலும், குளத்தூரில் பெண் வருவாய் ஆய்வாளர் பாதிக்கப்பட்டதால் குளத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் மூடப்பட்டது.
இவ்வாறு கிராமப் பகுதியிலும் பரவல் தீவிரம் அடைந்து வருவதால் மாவட்டத்தில் வடகாடு, கொத்தமங்கலம், மாங்காடு, கீரமங்கலம், பனங்குளம், மழையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அந்தந்த உள்ளாட்சி அமைப்பினர் மற்றும் வணிகர்கள் தாமாக முன்வந்து கடந்த சில தினங்களாக தினமும் மாலை 2 மணியில் இருந்து 3 மணி வரைக்குள்ளாகவே பகலில் கடைகளை அடைத்து கரோனா தடுப்பில் கூடுதல் அக்கறை செலுத்தி வருகின்றனர்.
இத்தகைய பரலானது மேலும் தீவிரம் அடையாமல் இருக்க புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமணம், காதணி, திருமண நிச்சயதார்த்த விழா போன்ற சுப நிகழ்ச்சிகளை அனுமதி பெற்ற பின்னரே நடத்த வேண்டும் என ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி இன்று (ஜூன் 29) அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, "புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் சுபநிகழ்ச்சிகள் நடத்துபவர்கள் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்திலும், நகர் பகுதிகளில் சம்பந்தப்பட்ட நகராட்சி அலுவலகத்திலும், பேரூராட்சிப் பகுதிகளில் சம்பந்தப்பட்ட பேரூராட்சி அலுவலகங்களிலும் தகவல் தெரிவித்து அனுமதி பெற வேண்டும்.
பொதுமக்கள் இதுபோன்ற சுபநிகழ்ச்சிகளை மாவட்ட நிர்வாகத்திற்குத் தகவல் தெரிவித்து அனுமதி பெறுவதன் மூலம் அதிக கூட்டம் கூடாமல் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கையை உறுதி செய்ய வழிவகை செய்யும். பொதுமக்கள் இத்தகைய நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.