

மதுரை மாநகராட்சி வளாகத்தில் கரோனா பாதித்தவர்களுக்கான ஆன்லைன் மனநல ஆலோசனை மையம் தொடக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தனர். ஆட்சியர் டிஜி. வினய், மாநகராட்சி ஆணையர் விசாகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதன்பின், அமைச்சர் செல்லூர் கே. ராஜூ கூறியது:
பொருளாதார நடவடிக்கையால் ஊரடங்கை தளர்த்தியதன் விளைவாக வெளி மாநிலம், மாவட்டங்களில் இருந்து வந்த வர்களால் மதுரை உட்பட பல மாவட்டத்தில் தொற்று அதிகரித்துள்ளது. இருப்பினும், கரோனா தடுக்க, முதல்வர் சிறப்பு கவனம் எடுத்து செயல்படுகிறார். மதுரையில் பரிசோதனை அதிகரித்ததால் தான் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கூடி யுள்ளது. பரிசோதனையை அதிகரிக்க சொன்னது எதிர்க்கட்சிகள் தானே. சாலையில் செல்பவர்களை எல்லாம் இழுத்து வந்து பரிசோதனை செய்ய முடியுமா? குற்றம் சொல்ல வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர். இறப்பு எண்ணிக்கையை அரசு மறைக்கவில்லை. பாதிப்பு, இறப்பு எண்ணிக்கையை மறைக்காமல் சொன்னால் தானே மக்கள் விதிகளை பின்பற்றுவர் என்பதால் அரசும் உண்மையை மறைக்க வில்லை. தனியார் மருத்துவமனைக்கு செல்பவர்களே அதிகம் இறக்கின்றனர். உயிர்காக்கும் மருந்துகள் மதுரைக்கு வந்து விட்டன. மக்கள் பயப்படவேண்டாம். பொதுவாக மதுரை மாவட்ட மக்களை பொறுத்தவரை நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். தொற்று பாதிக்கப்படு வோருக்கு மன உளைச்சல் ஏற்படாத வகையில் ஆலோசனை மையம் முதல் முறையாக மதுரையில் தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து அமைச்சர் ஆர்பி. உதயகுமார் பேசியது:
பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தேவையான அளவு பயன்படுத்திக்கொள்ள ஆட்சியர்களுக்கு தனி அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக தனி கணக்கு வைத்து, கரு வூலங்களில் இருந்து 24 மணி நேரமும் போதிய நிதியை எடுத்துக்கொள்ளலாம் என, முதல்வரே தெரிவித்துள்ளார். முதல்வர் நாளை (இன்று) மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். மருத்துவ, வல்லுநர் குழுக்கள் வழிகாட்டுதலின்படி, சூழ்நிலைக்கு ஏற்ப மககளின் நலன் கருதி முதல்வர் அடுத்த ஊரடங்கு பற்றி நடவடிக்கை எடுப்பார்,என்றார்.
முன்னதாக மாநகராட்சியில் பணியாற்றும் 5 ஆயிரம் தூய்மைப் பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் அடங்கிய பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.
படவிளக்கம்: மதுரையில் தொற்று பாதித்தவர்களுக்கான மனநல ஆலோசனை மையத்தை அமைச்சர்கள் நேற்று தொடங்கி வைத்தனர். ஆட்சியர், ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.