முதல்வர் அலுவலக ஊழியருக்கு கரோனாவால் புதுச்சேரி சட்டப்பேரவை முழுமையாக இன்று மூடல்

முதல்வர் அலுவலக ஊழியருக்கு கரோனாவால் புதுச்சேரி சட்டப்பேரவை முழுமையாக இன்று மூடல்
Updated on
1 min read

முதல்வர் அலுவலக ஊழியருக்கு கரோனாவால் புதுச்சேரி சட்டப்பேரவை முழுமையாக இன்று மூடப்பட்டது.

புதுச்சேரியில் ஊரடங்கு தளர்வுக்கு பிறகு பொது இடங்களில் மக்கள் கூட்டம் அதிகளவிலேயே உள்ளது. தொடர்ந்து புதுச்சேரியில் கரோனா தொற்று அதிகரித்தே வருகிறது. புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர் கரோனா தொற்றால் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி கரோனா பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சட்டப்பேரவை முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு முதல்வர் அலுவலகம் மூடப்படும் என்று நேற்று தெரிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட ஊழியர் வசிக்கும் உருளையன்பேட்டை கண்ணகி தெரு பகுதியும் சீல் வைக்கப்ட்டுள்ளது.

பொது நிகழ்வுகளில் பங்கேற்காமல் தனிமைப்படுத்திக்கொள்ள முதல்வர் நாராயணசாமிக்கும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இச்சூழலில் இன்று புதுச்சேரி சட்டப்பேரவை முழுக்க மூடப்பட்டது. சட்டப்பேரவை நுழைவு வாயில் மூடப்பட்டு பாதுகாப்பு பணியில் சட்டப்பேரவை காவலர்கள், போலீஸார் ஈடுபட்டிருந்தனர். அதேபோல் முதல்வர் அறை செல்லும் கதவுகள், அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன.

சட்டப்பேரவை அமைந்துள்ள சாலையில் சர்க்கிள் டி பாண்டிச்சேரி தொடங்கி சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலகம் வரை இருபகுதியிலும் தடுப்புகள் வைத்து சாலைகள் அடைக்கப்பட்டன.

சட்டப்பேரவைக்கு அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் யாரும் இன்று வரவில்லை. இப்பகுதி முழுக்க வெறிச்சோடி காணப்பட்டது.
இச்சூழலில் நாளை முதல்வர் அலுவலக ஊழியர்கள் தொடங்கி சட்டப்பேரவையில் பணிபுரிவோருக்கு கரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை தரப்பில் முடிவு எடுத்துள்ளதாக குறிப்பிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in