

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் மரணமடைந்த நிலையில், காவல்துறையானது மனித உயிர்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்க வேண்டுமே தவிர அவர்களே மனித உயிர்க்கொல்லியாக இருக்கக்கூடாது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று (ஜூன் 27) செய்தியாளர்களிடம் கூறியதாவது:
‘‘கரோனா தொற்று யார் மூலம் பரவுகிறது, யார் யாருக்குத் தொற்று வருகிறது என்று கண்டுபிடிக்க முடியாத சூழல் உள்ளது. அதற்காகத்தான் நேற்று மாநில பேரிடர் மீட்புத்துறையின் செயற்குழுவைக் கூட்டி, கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் என்னென்ன நடவடிக்கை எடுத்துள்ளார்கள் என கருத்துகளைக் கேட்டோம்.
நம்முடைய பணியாளர்கள் எல்லாம் எப்படி ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியிலும், ஜிப்மரிலும் படுக்கைகள் போதவில்லை என்றால், தனியார் மருத்துவமனைகளில் படுகைகளை உருவாக்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளோம்.
இதற்காக தனியார் மருத்துவக் கல்லூரிகளிடம் பேசுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் உள்ள மருத்துவமனைகள், துணை சுகாதார மையங்களில் 2 ஷிப்டுகளுக்கு மருத்துவர்கள் உள்ளனர். 3-வது ஷிப்டுக்கு யாரும் இல்லை. வில்லியனூர், பாகூர், மண்ணாடிப்பட்டு உள்ளிட்ட பல பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் 3 ஷிப்டுகள் மருத்துவர்கள் பணியாற்ற வேண்டும். அதற்குத் தனியார் மருத்துவக் கல்லூரியில் உள்ள மருத்துவர்களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இதற்காகத் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் ஒத்துழைப்பைக் கேட்டுள்ளோம். அதேபோல் தேவையான மருத்துவ உபகரணங்களை வாங்கவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நம்முடைய அரசு எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் வகையில் தயாராக இருக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.
கரோனா தொற்றுநோயைப் பொறுத்தவரை பொதுமக்கள் மத்தியில் பயம் வந்துள்ளது. அனைவரும் முகக்கவசம் அணிய ஆரம்பித்துள்ளார்கள். இப்போது தனிமனித இடைவெளியைப் பல இடங்களில் கடைப்பிடிக்கிறார்கள். இதற்கிடையே புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சி ஊழியர்கள் கடைகளுக்குச் சென்று அதிகப்படியாக அபராதம் விதிப்பதாகக் கூறினார்கள். இது சம்பந்தமாக 'அந்த அதிகாரிகளை அழைத்துப் பேசி நடவடிக்கை எடுக்கிறேன். கரோனா தொற்று உள்ள சமயத்தில் பொதுமக்களுக்கு அதிகாரிகள் மத்தியில் எந்தவித இடையூறும், பாதிப்பும் இருக்கக் கூடாது' எனக் கூறியுள்ளேன்.
ஆளுநருக்குப் பல முறை நான் கடிதம் எழுதி விளக்கமாகக் கூறியுள்ளேன். நீங்கள் எங்களுடைய அரசின் செயல்பாடுகளில் நேரடியாகத் தலையிட உங்களுக்கு அதிகாரம் கிடையாது.
சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி முதல்வரும், அமைச்சர்களும் நிர்வாகத்தை நடத்த வேண்டும், உத்தரவுகளைப் போட வேண்டும். அந்த உத்தரவுகளுக்குக் கட்டுப்பட்டு தலைமைச் செயலரும், அரசு செயலர்களும் செயல்பட வேண்டும். அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும். கருத்து வேறுபாடு இருந்தால் மிகவும் முக்கியமான காரணங்களைக் குறிப்பிட்டு ஏதாவது ஒரு சில பிரச்சினைகளுக்கு மட்டும் கோப்புகளை உள்துறை அமைச்சகம் மூலமாக குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்ப வேண்டும்.
கேள்வி கேட்டுக் கோப்பைத் திருப்பி அனுப்புவதற்கும், தன்னிச்சையாக உத்தரவு போடுவதற்கும், அதிகாரிகளுக்கு மாற்று உத்தரவு போடுவதற்கும் அதிகாரம் கிடையாது என்று கூறப்பட்டுள்ளது. இதனை பல முறை எடுத்துக் கூறியும் ஆளுநர் அதனைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. இது சம்பந்தமாக மேல்நடவடிக்கை எடுக்க அனைத்து வேலைகளையும் செய்து வருகிறோம்.
தினமும் உயர் நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல் செயல்பட்டு மாநில அரசுக்குக் களங்கத்தை ஏற்படுத்தும் வேலையை ஆளுநர் செய்து வருகிறார். அதிகாரிகள் அவருக்குத் துணைபோனால் அவர்களும் பாதிக்கப்படுவார்கள். அவர்கள் மீது நடவடிக்கை பாயும் என்று அதிகாரிகளை அழைத்துக் கூறியுள்ளேன்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு ’’2020-21 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டுக்கான கோப்பை மார்ச் மாதத்தில் நாங்கள் மத்திய அரசுக்கு அனுப்பியிருந்தோம். பிப்ரவரி மாதம் முழுவதும் துணைநிலை ஆளுநர் காலம் கடத்தி ஒப்புதல் அளித்தார். அது மூன்றுமாத காலமாக உள்துறை அமைச்சகத்தில் இருந்து நிதி அமைச்சகம் சென்று காலம் கடந்து வருகிறது. அதற்கு உடனடியாக ஒப்புதல் தர வேண்டும்’’ என்று கூறினேன்.
நிதியமைச்சர் உடனடியாக ஒப்புதல் அளித்து, அந்தக் கோப்பு தற்போது உள்துறை அமைச்சகத்துக்கு வந்துள்ளது. உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் இன்னும் ஓரிரு நாட்களில் வரும். அதன்பின்னர் நாங்கள் தேதி குறிப்பிட்டு சட்டப்பேரவையைக் கூட்டி பட்ஜெட்டை நிறைவேற்ற நடவடிக்கையை எடுப்போம்.
ஆனால், அரசின் மெத்தனப் போக்கினால் பட்ஜெட் தாக்கல் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது என்று ஒரு சிலர் தவறான தகவலைப் பரப்பி வருகின்றனர். சாத்தான்குளத்தில் இரண்டு வியாபாரிகள் காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் இறந்துள்ளனர். இது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. அந்தக் காவல் நிலைய அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறையானது மனித உயிர்களுக்குப் பாதுகாப்பு கொடுக்க வேண்டுமே தவிர அவர்களே உயிர்க்கொல்லியாக இருக்கக்கூடாது. இதன் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களின் உயிர் முக்கியம். வியாபாரிகளின் சாதாரணப் பிரச்சினைக்காகக் காவல் நிலையத்தில் வைத்துத் துன்புறுத்துவது, சிறையில் அடைத்த பின்னர் இறப்பது ஆகியவை காவல் துறையின் மெத்தனப் போக்கினாலும், அராஜகப் போக்கினாலும் நடைபெறுகிறது. இது தவிர்க்கப்பட வேண்டும். தமிழக முதல்வர் இதற்குக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனைச் செய்வார்கள் என்று நம்புகிறேன்.
எங்கள் மாநிலத்தில் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றிருந்தால் கடுமையான நடவடிக்கை எடுத்திருப்போம். தற்போது ஜூலை 2-ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். மத்திய அரசிடம் இருந்து எங்களுக்கு ஜூன் 30 ஆம் தேதி விதிமுறைகள் கிடைக்கும். அதன் பிறகு புதுச்சேரி மாநிலத்தில் ஊரடங்கை நீட்டிப்பதா? இல்லையா? என்பதை முடிவு செய்வோம்2''.
இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார்.