

புதுச்சேரியில் இன்று மேலும் 39 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 502 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரியில் கரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இன்று (ஜூன் 25) மேலும் 39 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 502 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 306 ஆக உள்ளது. இதுவரை 187 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் இன்று (ஜூன் 25) கூறும்போது, "புதுச்சேரியில் நேற்று 520 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 39 பேருக்குத் தொற்று இருப்பது இன்று உறுதியாகியுள்ளது. இதில் 11 பேர் கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியிலும், 20 பேர் ஜிப்மரிலும், காரைக்காலில் 7 பேர், பிற பகுதியில் ஒருவரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று பாதிக்கப்பட்ட நபர்களில் 8 பேர் முகக்கவசம் தயாரிக்கும் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள். அதேபோல், காரைக்காலில் பாதிக்கப்பட்ட 7 பேர் ஏற்கெனவே பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பில் உள்ளவர்கள். மற்றவர்கள் குறித்து விசாரித்து வருகிறோம். புதுச்சேரியில் இதுவரை 502 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது, கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் 203 பேர், ஜிப்மரில் 81 பேர், காரைக்காலில் 18 பேர், ஏனாமில் ஒருவர், மாஹேவில் ஒருவர், பிற பகுதியில் 2 பேர் என மொத்தம் 306 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே நேரத்தில், இன்று கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் 9 பேர், ஜிப்மரில் 2 பேர் என மொத்தம் 11 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 187 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 13 ஆயிரத்து 861 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. 13 ஆயிரத்து 171 பரிசோதனைகள் 'நெகட்டிவ்' என்று வந்துள்ளது. 201 பரிசோதனைகள் முடிவுக்காகக் காத்திருப்பில் உள்ளன" எனத் தெரிவித்தார்.