

புதுச்சேரி மாநிலம் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் வெளிப்புற நோயாளிகளின் சிகிச்சை பிரிவு வரும் 25 ஆம் தேதி முதல் நிறுத்தப்படுகிறது என்றும், அங்கு கரோனா தொற்றுக்கு மட்டும் சிகிச்சை அளிக்கப்படும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று (ஜூன் 23) செய்தியாளர்களிடம் கூறும்போது, "புதுச்சேரியில் கடைகள் காலை 6 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மட்டுமே இயங்கும். உணவகங்களில் 2 மணிவரை அமர்ந்து சாப்பிடலாம், இரவு 8 மணிவரை பார்சல் மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்று முதல்வர் அறிவித்தார்.
அது இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. நாங்கள் கரோனா தொற்று பரவல் நிலை குறித்து ஆராய்ந்து அறிக்கை தயார் செய்து முதல்வரிடம் அளிக்க உள்ளோம். புதுச்சேரி எல்லை பகுதிகள் தற்போது கட்டுப்பாட்டில் இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவித்துள்ளனர். அவசர சிகிச்சைக்கு வருவோர், இ-பாஸ் உள்ளவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
தற்போது கடைகள் திறப்பு நேரம் 2 மணி வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை முதல் புதுச்சேரிக்குள் வருவபர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது. தினமும் கரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முற்றிலும் கரோனா மருத்துவமனையாக மாற்ற உள்ளோம்.
இங்கு அளிக்கப்படும் வெளிப்புற சிகிச்சை (ஓபிடி) பிரிவு வரும் 25 அல்லது 26 ஆம் தேதியுடன் நிறுத்தப்படும். அதன்பிறகு கரோனாவுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்படும். இங்குள்ள உள்நோயாளிகள் அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்படுவர். கரோனா மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு சுழற்சி முறையில் பணி வழங்கப்படும்.
புதுச்சேரி, காரைக்காலில் கண்காணிப்பு பணிக்கு செயலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும். கிராமங்களில் வெளியூர் சென்று வருவோரின் விவரங்களை தெரிவிக்க குழுக்கள் அமைக்கப்படும்"
இவ்வாறு மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.