

புதுச்சேரி மாநிலத்தில் நாளை முதல் 10 நாட்களுக்கு காலை 6 முதல் 2 மணி வரை மட்டுமே கடைகள் இயங்கும் என முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் கரோனாவை கட்டுப்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் முதல்வர் நாராயணசாமி தலைமையில் நேற்று (ஜூன் 21) இரவு நடைபெற்றது. சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இக்கூட்டத்தில் அமைச்சர்கள், தலைமைச் செயலர் மற்றும் பல்வேறு துறை செயலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"புதுச்சேரி மாநிலத்தில் கரோனா அதிகரிப்புக்கு சென்னையிலிருந்தும், வெளிமாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் வருவோர்தான் காரணம். இதற்காகவே எல்லைகள் மூடப்பட்டுள்ளன.
இதையும் மீறி சென்னையிலிருந்து புதுச்சேரிக்குள் வருவோர் குறித்து மக்கள் வருவாய்த்துறை, காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்கள் பரிசோதிக்கப்பட்டு, 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர். இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி, ஜிப்மர் மருத்துவமனைகளில் அதிகமானோருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவக் கல்லூரிகள் கரோனா சிகிச்சைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அரசு மருத்துவமனைக்குத் தேவையான உபகரணங்கள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதே போல, 40 புதிய மருத்துவர்கள், 60 செவிலியர்கள், 700 துணை மருத்துவ ஊழியர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கரோனா தொற்று பரவி வரும் நிலையில் ஒரு சிலர் முக்கக்கவசம் அணியாமல் வெளியே வருகின்றனர். முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் முகக்கவசம் அணியாமல் வெளியில் சுற்றினால் ஏற்கெனவே ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அது ரூ.200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் நாளை (ஜூன் 23) முதல் 10 நாட்களுக்கு கடைகள் காலை 6 மணியிலிருந்து பிற்பகல் 2 மணி வரை மட்டுமே இயங்கும். பெட்ரோல் பங்குகள் காலை 6 மணியிலிருந்து பிற்பகல் 2 மணி வரை இருக்கும். பால் பூத்துகள் மாலை 6 மணி வரை இயங்கும். உணவகங்களில் மதியம் 2 மணி வரை அமர்ந்து சாப்பிடலாம். இரவு 9 மணி வரை பார்சல்கள் வாங்கிச் செல்லலாம்.
மதுக்கடைகளும் 2 மணிக்குள் மூட வேண்டும். அனைத்து வியாபாரம் செய்வோரும் 2 மணிக்கு கடையை மூடிவிட்டு, வீட்டுக்கு 3 மணிக்குள் செல்ல வேண்டும். கடற்கரை சாலையில் தனிமனித இடைவெளியின்றி, மக்கள் அதிகமாகக் கூடுகின்றனர். எனவே, கடற்கரை சாலையும் 10 நாட்களுக்கு மூடப்படும். இந்த உத்தரவுகளை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
தொழிற்சாலைகள் இயங்கும். தொழிலாளிகளுக்கு சென்று வர அனுமதி பாஸ் வழங்கப்படும். கட்டிட வேலைகளுக்கும், விவசாய வேலைகளுக்கும் தடை கிடையாது. நகர, கிராமப்பகுதிகளில் வருவாய்த்துறை, மருத்துவம், காவல்துறை, உள்ளாட்சித்துறையுடன் இணைந்து ஐஏஎஸ் அதிகாரிகள் கரோனா தடுப்புப் பணிகளை கண்காணிப்பர்.
கரோனா பரவ வாய்ப்புள்ளதால் குடிமைப்பொருள் துறை, மீன்வளத்துறை கணக்கெடுப்பு கரோனா தொற்று குறையும் வரை நிறுத்தப்படும். புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் தொடர்ந்து மக்கள் அதிகமாக வருவதால், அங்குள்ள காய்கறி மார்க்கெட் புதிய பேருந்து நிலையத்தில் செயல்படும். சண்டே மார்க்கெட்டை வேறிடத்துக்கு மாற்ற முடிவு செய்துள்ளோம். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
கரோனா பாதிப்பு இருந்தால் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும். அறிகுறிகள் இருந்தால் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்படுவர். இதற்கு அனைத்துத் தரப்பு மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்"
இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார்.