புதுச்சேரியில் புதிதாக 31 பேருக்கு கரோனா தொற்று உறுதி; மேலும் ஒரு முதியவர் உயிரிழப்பு 

புதுச்சேரியில் புதிதாக 31 பேருக்கு கரோனா தொற்று உறுதி; மேலும் ஒரு முதியவர் உயிரிழப்பு 
Updated on
2 min read

புதுச்சேரியில் இன்று புதிதாக 31 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 31 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 366 ஆகவும், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 218 ஆகவும் உயர்ந்துள்ளது. இதுவரை 140 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கிருமாம்பாக்கம் அருகே உள்ள மதிகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் இறப்பு எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் இன்று(ஜூன் 21) கூறியதாவது:

''புதுச்சேரியில் நேற்று 255 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இவற்றில் 31 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 12 பேர் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியிலும், 18 பேர் ஜிப்மரிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதுபோல் ஏனாம் பிராந்தியத்தைச் சேர்ந்த ஒருவரும் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், கிருமாம்பாக்கம் அடுத்த மதிகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த 64 வயது முதியவர் ஏற்கெனவே சர்க்கரை, ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் கடுமையான கரோனா நுரையீரல் பாதிப்புடன் ஒரு வாரமாக ஜிப்மரில் செயற்கை சுவாசத்தில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார், செயலர் பிரசாந்த்குமார் பண்டா.
புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார், செயலர் பிரசாந்த்குமார் பண்டா.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 366 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரியில் 159 பேர், ஜிப்மரில் 50 பேர், காரைக்காலில் 8 பேர், ஏனாமில் ஒருவர் என 218 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 140 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குறிப்பாக, இன்று கதிர்காமம் மருத்துவக் கல்லூரியில் 8 பேர், ஜிப்மரில் ஒருவர் என 9 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 12 ஆயிரத்து 409 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 11 ஆயிரத்து 866 பரிசோதனைகள் நெகடிவ் என்று வந்துள்ளது.

190 பரிசோதனைகள் காத்திருப்பில் உள்ளன. புதுச்சேரியில் வயது வித்தியாமின்றி கரோனாவால் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, பொதுமக்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இன்று மாலை பேரிடர் மேலாண்மை துறை சார்பில் கூட்டம் நடைபெறவுள்ளது. அப்போது சுகாதாரத்துறை சார்பில் எங்களிடம் உள்ள புள்ளிவிவரங்களைத் தெரிவிப்போம். அதன் பேரில் முதல்வர் சில அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கிறோம்’’.

இவ்வாறு மோகன்குமார் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in