

புதுச்சேரியில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்க முடிவு செய்துள்ளதாகவும், நாளை இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று (ஜூன் 20) செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"புதுச்சேரி மாநிலத்தில் கரோனா தொற்று பரவுவது அதிகமாக உள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து வீட்டுக்குச் செல்வது குறைவாக உள்ளது. நாம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தாலும் கூட சென்னையிலிருந்து வருபவர்கள் எந்த அனுமதியும் இல்லாமல் குறுக்கு வழியில் உள்ளே நுழைந்து விடுகின்றனர்.
அவர்களைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறைக்கும், வருவாய்த்துறைக்கும் உத்தரவிட்டுள்ளோம். மேலும் பொதுமக்களும் வெளி மாநிலத்தில் இருந்து வந்திருப்பவர்கள் குறித்துத் தகவல் தெரிவிக்க வேண்டும். புதுச்சேரி மாநிலத்தில் கரோனா தொற்றைத் தடுத்து நிறுவத்துவதில் சிரமம் ஏற்படுகிறது.
ஒருவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்ய அரசுக்கு ரூ.4,500 ஆகின்றது. ஒருபுறம் நிதிச்சுமை இருந்தாலும் கூட தேவையான உபகரணங்களைப் பெற நடவடிக்கை எடுக்கிறோம். மருத்துவத்துறை இரவு பகல் பாராமல் முனைந்து செயல்படுகிறது. இருப்பினும், பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் கரோனாவைத் தடுத்து நிறுத்த முடியாது.
எல்லோருமே அரசு கூறுகின்ற கருத்துகளைக் கேட்டுச் செயல்பட வேண்டும். நாளை மாநில பேரிடர் மீட்புத்துறையின் கூட்டம் கூட்டப்படுகிறது. அதில், கரோனா தொற்று மிகப்பெரிய அளவில் பரவாமல் இருக்க அனைத்துத் துறைகளின் சார்பிலும் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசித்து முக்கிய முடிவகளை எடுத்து வெளியிடுவோம்.
அந்த முடிவுகள் கடுமையாக இருக்கும். மக்களைக் காக்க வேண்டும் என்பதற்காக எடுக்கின்ற முடிவுகள் சிலருக்குப் பாதிப்பாகக்கூட அமையலாம். அனைவரும் அதற்குக் கட்டுப்பட வேண்டும். கடலூர், விழுப்புரம் மாவட்ட மக்கள் புதுச்சேரி மாநிலத்துக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும்.
மத்திய நிதியமைச்சர் யூனியன் பிரதேசங்களில் மின் விநியோகத்தைத் தனியார் மயமாக்க வேண்டும் என்று அறிவித்தார். அதன்பிறகு மின்சாரத்துறையிடம் இருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் படிப்படியாக மின் விநியோகத்தை தனியார்மயமாக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
அதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்து, புதுச்சேரி சட்டப்பேரவை உள்ள யூனியன் பிரதேசம். புதுச்சேரி சட்டப்பேரவையில் அதற்கான நடவடிக்கையை நாங்கள் எடுக்க வேண்டியிருக்கும். சட்டப்பேரவையில் ஆலோசிக்காமல் எந்த முடிவும் எடுக்க முடியாது.
புதுச்சேரியில் மின்சார விநியோகத்தைப் பொறுத்தவரையில் விவசாயிகள், வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களுக்கும் மற்றும் தொழிற்சாலைகளுக்கும் சலுகை கொடுக்கிறோம். மின்சாரத்தினால் புதுச்சேரிக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படவில்லை. ஆகவே, அதனை ஏற்க முடியாது என்று தெரிவித்தேன். மின்துறைப் பணியாளர்களும் என்னை வந்து சந்தித்தனர்.
அவர்களிடம் தெளிவாக மாநில அரசு உங்கள் பக்கம் இருக்கிறது. நாங்கள் உங்களுடன் இணைந்து செயல்படத் தயாராக இருக்கிறோம். மீறி மத்திய அரசு நடவடிக்கை எடுத்தால் நாங்களே நீதிமன்றம் செல்வோம் என்றோம். அவர்களும் எங்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
ஆனால், சில தினங்களுக்கு முன்பு இரவில் பணிபுரியமாட்டோம் என்று ஊழியர்கள் முடிவெடுத்துப் பணிபுரியவில்லை. இதனால் மின்தடை ஏற்படும் பகுதிக்கு ஊழியர்கள் யாரும் செல்லாததால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். புதுச்சேரி மாநில மக்கள் மின்துறை பணியாளர்களுக்கு ஆதரவாக உள்ளனர். அரசும், அரசியல் கட்சியினரும் ஆதரவாக உள்ளனர்.
இச்சூழ்நிலையில் குறைந்த காலம் மட்டுமே பணிபுரிவோம் என்று சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாது. மத்திய அரசை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபடுவது அவர்களின் உரிமை. ஆனால், மாநில அரசுக்கும், மத்திய அரசு எடுத்த முடிவுக்கும் சம்பந்தம் கிடையாது. ஆகவே வேலை செய்ய முடியாது என்று கூறுவதை ஏற்க முடியாது.
நான் மின்துறைப் பணியாளர் பிரதிநிதிகளைச் சந்தித்துப் போராட்டத்தைக் கைவிடக் கோரினேன். அதனை அவர்கள் ஏற்றுக்கொண்டனர். ஆனால், ஒருசிலர், ஊழியர்கள், பணிபுரியவில்லை என்று கூறி சட்டப்பேரவையில் போராட்டம் நடத்துகின்றனர். சட்டப்பேரவையின் உள்ளேயும், வெளியேயும் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி கிடையாது.
ஊடரங்கு உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையில் போராட்டம் நடத்தக்கூடாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய பாஜக அரசுக்கு அதிமுக ஆதரவு அளிக்கிறது. ஆனால், மத்திய அரசின் உத்தரவை மதிக்கவில்லை. மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்த வேண்டும் என்றால், டெல்லிக்குச் சென்று போராட்டம் நடத்தட்டும்.
மாநில அரசுக்கும், மத்திய அரசு எடுத்துள்ள முடிவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆகவே, மக்களைத் திசை திருப்புவது, சுயவிளம்பரம் தேடுவது என ஒருசிலர் செய்யும் வேலை புதுச்சேரி மாநில மக்கள் மத்தியில் பலிக்காது. தினமும் என்ன நடக்கிறது, யார் மக்களுக்காக உழைக்கின்றனர் என்பது மக்களுக்குத் தெரியும்.
எனவே, யாரும் இந்த நேரத்தில் நாடகம் ஆட வேண்டாம். பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான நடவடிக்கை எடுத்து, அதற்கான கோப்பு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. இப்போது அந்தக் கோப்பு உள்துறை அமைச்சகத்துக்கு வந்தள்ளது. உள்துறை அமைச்சரகம் அடுத்த வாரத்தில் முடிவு செய்தால், இப்போதே நாங்கள் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான வேலையைச் செய்வோம்.
நானும், அமைச்சர்களும் அமர்ந்து பேசியுள்ளோம். எம்எல்ஏக்கள், அனைத்து அரசியல் கட்சியினர், தொழிற்சங்கத்தினர் என அனைவருடைய கருத்துகளையும் கேட்டுள்ளோம். அவர்களுடைய கருத்துகள் அனைத்தையும் கேட்டு இந்த மாத இறுதிக்குள் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான நடவடிக்கை எடுப்போம்".
இவ்வாறு நாராயணசாமி தெரிவித்துள்ளார்.