

சென்னையில் வாழ்ந்து வரும் குமரி மாவட்ட மக்களை உரிய அனுமதியின்றி குமரி மாவட்டத்திற்குள் அழைத்து வரும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதனைத் தொடர்ந்து மாவட்ட எல்லைகளான ஆரல்வாய்மொழி மற்றும் அஞ்சுகிராமம் சோதனைச் சாவடிகளில் போலிீஸார் தீவிர சோதனை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் நெல்லை மாவட்ட எல்லையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அஞ்சுகிராமம் சோதனைச் சாவடி வழியாக குமரி மாவட்டத்திற்குள் நுழைய முயன்ற உள்ளூர் ஆட்டோ ஒன்றினை நிறுத்தி, போலீஸார் விசாரனை நடத்தினர். அப்போது ஆட்டோவில் இருந்தவர்கள் முன்னுக்குப் பின் முரணாகp பேசினர்.
இதனால் சந்தேகமடைந்த போலீஸார் அவர்களைப் பிடித்து விசாரித்ததில், ஆட்டோவில் இருந்த நான்கு பயணிகளும் இ-பாஸ் இல்லாமல் சென்னையில் இருந்து கார் மூலமாக குமரி - நெல்லை எல்லையான அஞ்சுகிராமம் சோதனைச் சாவடி வரை வந்ததும், பின்னர் ஏஜெண்ட் மூலமாக உள்ளூர் ஆட்டோவில் ஏறிக் குமரி மாவட்டத்தில் நுழைய முயன்றதும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து சென்னையில் இருந்து இ-பாஸ் இல்லாமல் வந்த 4 பயணிகளும் சுகாதாரத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டனர். மேலும், சட்டவிரோதமாகக் குமரி மாவட்டத்திற்குள் நுழைய உதவிய லெவிஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் கணேஷ் கைது செய்யப்பட்டார். அவரது ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது.