

செம்மொழி அந்தஸ்து பெற்ற பெருமைமிகு தமிழ் மொழிக்கு உலகப் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் இருக்கை அமைக்கப்பட்டது. உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் நன்கொடைகள், தமிழக அரசு அளித்த 10 கோடி ரூபாய் நன்கொடை, திமுக அளித்த 1 கோடி ரூபாய் நன்கொடை ஆகியவற்றுடன் சேர்த்து 7 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஆதார நிதியாக ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்குச் செலுத்தி, 'Communitty chair' என்ற அந்தஸ்துடன் தமிழ் இருக்கை தொடங்கப்பட்டது.
தற்போது, ஹார்வர்டு பல்கலைக்கழகத்தைத் தொடர்ந்து தமிழர்கள் பேரளவில் புலம்பெயர்ந்து வாழும் கனடா நாட்டின் டொரண்டோ பல்கலைக்கழகத்திலும் தமிழுக்கு இருக்கை அமைப்பதை எழுத்தாளர் அப்பாத்துரை முத்துலிங்கம் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் முன்னெடுத்து வருகிறார்கள். இதுவும் ஒரு 'கம்யூனிட்டி இருக்கை'யாக அமைய இருக்கிறது. இதற்காக டொரண்டோ பல்கலைக்கழகத்துக்குச் செலுத்த வேண்டிய ஆதார நிதி 3 மில்லியன் டாலர்கள். இதில் பெரும்பகுதி நன்கொடை ஏற்கெனவே திரட்டப்பட்டுள்ள நிலையில், இந்தியப் பணத்துக்கு 9 கோடி ரூபாய் மட்டுமே இன்னும் திரட்டப்பட உள்ளது. தமிழகத்தில் வாழும் தமிழர்களிடமும் கணிசமான நன்கொடையை இவ்விருக்கைக்குத் திரட்டும்பொருட்டு டொரண்டோ தமிழ் இருக்கைக்கான தூதராக, இசையமைப்பாளர் டி.இமானுக்கு சிறப்பு கவுரவம் வழங்கப்பட்டிருக்கிறது.
இச்செய்தியைப் பகிர்ந்துகொண்ட டி.இமான் தெரிவிக்கும்போது. "உலகின் தொன்மையான மொழி எனப் போற்றப்படும் தமிழ், வாய்வழித் தொடர்பு மொழி என்பதைத் தாண்டி மனித குலத்தின் வாழ்வியல், நாகரிகம் மற்றும் கலாச்சாரங்களைத் தன் இலக்கியங்களில் உள்ளடக்கியதாகும். மொழிகளின் தாய் எனத் தமிழ் புகழப்படுவது குறித்து தமிழன் என்ற முறையில் நான் பெருமையும் பேருவகையும் கொள்கிறேன். பல்வேறு கலை வடிவங்கள் மூலம் மொழிக்குச் செழுமை ஏற்றிய மிகச் சிறந்த மனிதர்களால் ஆசிர்வதிக்கப்பட்டது தமிழ் நிலம்.
டொரண்டோ தமிழ் இருக்கையின் தூதராக நான் நியமிக்கப்பட்டபோது, இவற்றையெல்லாம் அறிந்து மிகவும் ஆச்சரியமடைந்தேன். கனடாவின் முதல் தரப் பல்கலைக்கழகமான டொரண்டோவில் நமது தாய்மொழிக்கு இருக்கை அமைத்து அங்கீகரித்தது, உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கெல்லாம் உவகை தரும் பெருமைமிகு தருணம். டொரண்டோ பல்கலைக்கழகத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் நான் நன்றி செலுத்தும் இந்த நேரத்தில், எனக்கு அளிக்கப்பட்ட இந்த கவுரவம், தாய்மொழி மீது நான் கொண்ட ஈடுபாட்டை இன்னும் மேம்படுத்தும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
நெருக்கடியான காலத்தில் நாம் இருக்கிறோம் என்றாலும் தங்களால் இயன்ற தொகை அது எவ்வளவு சிறிதாயினும் அதை, www.learntamil.ca இணையதளத்துக்குச் சென்று அளித்து கரம் கொடுக்க வேண்டும்" என்றார்.