

புதுச்சேரியில் இன்று புதிதாக 27 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் இன்று (ஜூன் 18) புதிதாக 27 பேருக்கு கரோனா தொற்று இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 271 ஆகவும், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 149 ஆகவும் அதிகரித்துள்ளது.
மேலும், கதிர்காமம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 52 வயது நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் இறப்பு எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 116 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, "புதுச்சேரியில் இன்று மேலும் 27 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 26 பேர் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியிலும், ஒருவர் ஜிப்மர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், நீரிழிவு, உயர் ரத்த அழுத்த பிரச்சினையால் பாதிக்கப்பட்ட கதிர்காமம் பகுதியைச் சேர்ந்த 52 வயது நபர் கரோனா தொற்றுடன் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். அவர் நேற்று இரவு 10 மணிக்கு மருத்துவர்கள் பரிசோதிக்கும்போது கூட நன்றாக இருந்தார். திடீரென இன்று காலை அவர் உயிரிழந்துள்ளார்.
உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான் கரோனா தொற்றால் இறக்கிறார்கள். மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது என பொதுமக்கள் அலட்சியமாக உள்ளனர். ஆனால், இறப்பதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு நன்றாக பேசிக்கொண்டிருந்த 52 வயது நபர் திடீரென உயிரிழந்துள்ளார்.
எனவே, கரோனா வீரியத்தை மக்கள் உணர்ந்து செயல்பட வேண்டும். தற்போது கரோனா வேகமாக பரவுகின்ற நிலையில் உள்ளது. எனவே, மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் எதுவும் செய்ய முடியாது. மக்கள் வெளி மாநிலங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 271 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று கதிர்காமம் அரசு மருத்துவமனையில் 4 பேர், மாஹே பிராந்தியத்தில் 3 பேர் என 7 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 116 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது கதிர்காமம் மருத்துவக் கல்லூரியில் 120 பேர், ஜிப்மரில் 22 பேர், காரைக்காலில் 6 பேர், மாஹே பிராந்தியத்தில் ஒருவர் என மொத்தம் 149 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 11 ஆயிரத்து 356 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. 10 ஆயிரத்து 920 பரிசோதனைகள் 'நெகட்டிவ்' என்று வந்துள்ளது. 179 பரிசோதனைகள் முடிவுக்காக காத்திருப்பில் உள்ளன.
இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரியில் மருத்துவர்கள், செவிலியர்கள் 3 மாதங்களாக கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு சிறிது ஓய்வு செய்யப்படுகிறது.
வெளிநாட்டிலிருந்து வந்த 80 சதவீதம் பேருக்கு தொற்று வந்துள்ளது. அதேபோல், வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்களும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரியில் 23 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளனர். புதுச்சேரியில் மூன்று சட்டப்பேரவை தொகுதிகளுகு ஒரு அரசு செயலர் என்ற வீதத்தில், தினமும் காலை ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணிநேரம் கரோனா தொற்று தடுப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என முதல்வரிடம் தெரிவித்துள்ளேன்.
சுகாதாரத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை செயல்பட்டால் மட்டும் போதாது.
அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் தான் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த முடியும்" என மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.
பேட்டியின்போது சுகாதாரத்துறை செயலாளர் பிரசாந்த்குமார் பாண்டா, இயக்குநர் மோகன்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.