

கரோனா பொதுமுடக்கக் காலத்தில் மனிதநேயம் உள்ளவர்கள் அனைத்து மட்டத்திலும் இருப்பதை அறிந்து கொள்ளும்படியான சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
ஒரே மண்டலத்திற்குள்தான் பேருந்துகளை இயக்க முடியும் என்பதாலும், 60 சதவீதப் பயணிகளை மட்டுமே ஏற்றிச் செல்ல முடியும் என்பதாலும் பல்வேறு வழித்தடங்களில் பேருந்துகளை இயக்கவே தனியார் பேருந்து உரிமையாளர்கள் மறுத்து வருகின்றனர்.
பல லட்சம் ரூபாய் போட்டு வாங்கிய பேருந்து இத்தனை நாட்கள் முடங்கிக்கிடந்த போதும், கொள்ளிடத்தைச் சேர்ந்த எஸ்.பிரகாசம் இலவசப் பேருந்து சேவையைத் தொடங்கியுள்ளார். கடந்த 17-ம் தேதியிலிருந்து சிதம்பரம் - மயிலாடுதுறை ரூட்டில் தனது இலவசப் பேருந்து சேவையைத் தொடங்கியிருக்கும் இவர் 8 நாட்களுக்கு இந்த இலவச சேவை தொடரும் என அறிவித்திருக்கிறார்.
சிதம்பரம் வேறு மண்டலம் என்பதால் திருச்சி மண்டலத்துக்குள் ஓடும் அரசுப் பேருந்துகள் நாகை மாவட்ட எல்லையான கொள்ளிடத்தில் இருந்து இயங்கி வருகின்றன. அதேபோல, பிரகாசத்தின் பேருந்தும் கொள்ளிடத்தில் இருந்தே இயக்கப்படுகிறது. சீர்காழி, பட்டவர்த்தி வழியாக மயிலாடுதுறை வரை பேருந்து இயக்கப்படுகிறது.
பேருந்தில் பயணிக்கும் பயணிகளுக்கு டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. முகக்கவசம் அணிந்து வரும் பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். தனிமனித இடைவெளியைப் பின்பற்றி 60 சதவீதப் பயணிகள் மட்டுமே பேருந்தில் அனுமதிக்கப்படுகின்றனர். பயணிகள் அனைவருக்கும் கிருமிநாசினி கொடுக்கப்பட்டு கைகளைச் சுத்தம் செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.
இதுகுறித்து பேருந்தின் உரிமையாளர் எஸ்.பிரகாசத்திடம் பேசினேன். "இந்த வழித்தடத்தில் நான் பேருந்து வழித்தடத்தை வாங்கி ஒன்றரை வருடம்தான் ஆகிறது. இது முற்றிலும் கிராமங்களைக் கொண்ட வழித்தடம். திரும்பத் திரும்ப அதே பயணிகள்தான் பயணிக்கிறார்கள். அதனால் அனைவருமே நடத்துநர், ஓட்டுநருடன் உரிமையுடன் பழகுவார்கள். இத்தனை நாளும் அந்த மக்களின் பணத்தில் ஓட்டிய பேருந்தை இந்த சிரமமான காலத்தில் அந்த மக்களுக்காக இலவசமாக ஓட்ட வேண்டும் என்று கருதி தற்போது ஒருவார காலத்துக்கு இலவசமாக இயக்குகிறோம்.
இதற்காக நாள் ஒன்றுக்குப் பத்தாயிரம் ரூபாய் செலவாகிறது. எங்கள் தந்தை ஒரு சுதந்திரப் போராட்டத் தியாகி. மக்களுக்காக எதையாவது செய்ய வேண்டும் என்று எங்களுக்குச் சொல்லிக் கொடுத்து இருக்கிறார். பெரிதாக இல்லாவிட்டாலும்கூட ஏதோ நம்மால் முடிந்தது இதையாவது செய்வோம் என்றுதான் இதைச் செய்கிறோம்" என்றார் பிரகாசம்.