

“கோவை மாவட்டத்தில், ஜூன் 7-ம் தேதி வரை 22,872 பேருக்கு மட்டுமே கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்று பரவும் அபாயம் அதிகம் உள்ளதால், பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்” என்று கோரியிருக்கிறார் கோவை சிங்காநல்லூர் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் நா.கார்த்திக்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
''2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி கோவையில் 34.58 லட்சம் பேர் வசிக்கிறார்கள். இன்றைய தேதிக்கு அந்த எண்ணிக்கை 50 லட்சமாக அதிகரித்திருக்கும். தமிழக அரசு வெளியிட்டிருக்கும் தகவல்களின் அடிப்படையில், கோவையில் ஜூன் 7-ம் தேதி வரை செய்யப்பட்ட கரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 22,872 ஆகும். தேசிய அளவில், ஒவ்வொரு 10 லட்சம் பேருக்கும் 539 பரிசோதனைகள் என்ற சராசரி கணக்கில் பரிசோதனைகள் செய்யப்பட்டிருக்கும் நிலையில் கோவைக்கு இந்த எண்ணிக்கை நிச்சயம் போதாது.
கோவையில் தினமும் 50 முதல் 100 பரிசோதனைகள்கூடச் செய்யப்படவில்லை. அப்படியானால் கோவையில் பரிசோதனைகளைக் குறைத்து, நோய்த் தொற்று குறைகிறது அல்லது நோய்த் தொற்றே இல்லை என்று போலியாகக் காட்ட நினைக்கிறதா தமிழக அரசு? பரிசோதனைகளைச் செய்யாமல் கரோனா பரவல் இல்லை என்று சொல்லிக்கொள்வது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வது போல ஆகும்.
கரோனாவைப் பொறுத்தவரை ஆபத்தை மறைக்க மறைக்க, அது பேராபத்தாக மாறும். கோவையில் நாளுக்கு நாள் வைரஸ் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதே இதற்கு உதாரணம். கரோனாவே இல்லை என்ற தோற்றத்தை சில நாட்களாக உருவாக்கிக்கொண்டிருந்தவர்கள், தற்போது பரிசோதனைகளின் எண்ணிக்கையையும் குறைத்துள்ளார்கள் .
உரிய காலத்தில் வைரஸ் பாதிப்பைக் கண்டறிந்து, வகைப்படுத்துவதை உறுதிசெய்துவிட்டால், லேசான தொற்று பாதிப்புகளுக்கு வீட்டிலிருந்தபடியே சிகிச்சை பெறச் செய்யலாம். விமான நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் பரிசோதனைகளின்போது நோய் அறிகுறிகள் தென்படவில்லை என்று ஊருக்கு அனுப்பப்பட்டவர்கள் மூலம் தொற்று பரவியிருக்கவும் வாய்ப்பு உள்ளது.
எதிர்பாராமல் தீவிரமாக வைரஸ் பரவினால், மருத்துவமனைகளில், நோயாளிகள் வருகை கணிசமாக அதிகரித்துவிடும். அதை எதிர்கொள்ளும் அளவுக்குப் போதிய எண்ணிக்கையில் முகக்கவசங்கள், கையுறைகள், மருந்துகள் மற்றும் வென்டிலேட்டர்கள் கையிருப்பு உள்ளதா என்பது தமிழக அரசு சார்பில் இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை.
மக்களுக்குப் புள்ளிவிவரங்களை வெளிப்படையாகத் தெரியப்படுத்தி, தொற்று பரவுதலைக் கட்டுப்படுத்த 24 மணிநேர உதவி எண் ஏற்படுத்த வேண்டும். அதிக அளவில் பரிசோதனை செய்வதே கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த ஒரு முக்கிய வழி என உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. இனிவரும் காலங்களிலாவது, கோவையில் கரோனா வைரஸ் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்''.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.