

புதுச்சேரியில் கரோனா தொற்றால் சென்னையைச் சேர்ந்த மேலும் ஒரு முதியவர் உயிரிழந்துள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒற்றை இலக்கத்தில் இருந்த கரோனா தொற்று எண்ணிக்கை, தற்போது மூன்று இலக்கத்தைத் தொட்டுள்ளது. குறிப்பாக, வெளிமாநிலத்தில் இருந்து புதுச்சேரிக்கு சட்டவிரோதமாக வருபவர்களால்தான் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ஓட்டுநராகப் பணிபுரிபவர் தியாகராஜன். இவர் கடந்த மே மாதம் 24 ஆம் தேதி கோரிமேடு ஜிப்மர் மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஊழியர்கள் குடியிருப்பில் வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தினார். இதற்காக, சென்னையிலிருந்து உறவினர்களான 71 வயது முதியவர் உள்ளிட்ட 4 பேர் வந்தனர்.
வளைகாப்பு முடித்துவிட்டு சென்னைக்குத் திரும்பிய நிலையில், முதியவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. கரோனா பீதியால் சென்னைக்குப் பதிலாக புதுச்சேரி ஜிப்மரில் சிகிச்சை பெறலாம் என அவர்கள் திட்டமிட்டு சென்னையிலிருந்து மறுநாள் 25 ஆம் தேதி காரில் புதுச்சேரிக்கு மீண்டும் எந்த அனுமதியும் பெறாமல் வந்தனர்.
அப்போது, புதுச்சேரி கோரிமேடு எல்லையில் பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தி விசாரித்தபோது, சென்னைக்கும், புதுச்சேரிக்கும் 2 நாட்களாக எந்தவித அனுமதியுமின்றி வந்து சென்றது தெரியவந்தது. மேலும், ஒரு காரில் 2 பேருக்கு மேல் பயணம் செய்யக்கூடாது என்ற அரசு உத்தரவையும் மீறியிருந்ததையடுத்து, காரில் பயணம் செய்த 4 பேர் மற்றும் தடை உத்தரவை மீறி வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்திய தியாகராஜன் உள்ளிட்ட 5 பேர் மீதும் கோரிமேடு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும், அவர்களில் 71 வயது முதியவர் உட்பட 4 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று (ஜூன் 16) 71 வயதான முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
புதுச்சேரியில் கரோனாவால் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த 3-வது நபர் இவர் ஆவார்.