

புதுச்சேரியில் இன்று புதிதாக 8 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 200-ஐக் கடந்துள்ளது. தற்போது மருத்துவமனையில் 103 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுச்சேரியில் கரோனா தொற்றுப் பரவல் தீவிரமடைந்துள்ளது. இதனால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் தினமும் அதிகரித்து வருகிறது. நேற்று வரை 194 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 91 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 99 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். அரும்பார்த்தபுரம் (தற்காலிக முகவரி கொடுத்த நபர்), முத்தியால்பேட்டை, முதலியார்பேட்டை, பீமன் நகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இன்று புதிதாக 8 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது மருத்துவப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 202 ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் மோகன்குமார் இன்று கூறியதாவது:
''மேலும் 8 பேர் புதிதாகக் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பிள்ளைச்சாவடி, முருங்கப்பாக்கம் சேத்திலால் நகர், திலகர் நகர், தவளக்குப்பம் அருகே உள்ள பிள்ளையார்குப்பம், சண்முகாபுரம், தர்மாபுரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதில் ஒருவர் பிஆர்டிசி ஓட்டுநர் ஆவார். இந்த 8 பேருக்கும் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பாதிக்கப்பட்ட 8 பேரில் 7 வயதுச் சிறுமியும் ஒருவர். ஒருவர் புலம்பெயர்ந்த தொழிலாளர்களைச் சென்னைக்கு அழைத்துச் சென்ற பிஆர்டிசி ஓட்டுநரும் ஆவார். ஒருவர் அதிகக் கூட்டமுள்ள பகுதிகளுக்குச் சென்றுவந்தவர் ஆவார்.
அதுபோல் ஏற்கெனவே 5 தொழிலாளர்கள் மேட்டுப்பாளையத்தில் உள்ள முகக்கவசம் தயாரிக்கும் நிறுவனத்தில் கரோனா தொற்றுக்கு ஆளாகியிருந்தனர். அந்தத் தொழிற்சாலையில் மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தத் தொழிற்சாலையில் 3 அடுக்கு முகக்கவசம், என்.95 முகக்கவசம் போன்றவை தயாரிக்கப்படுகிறது. முகக்கவசத்தில் கரோனா வைரஸின் ஆயுள் 6 மணிநேரம்தான். மேலும், அந்த நிறுவனத்தில் தயாரிக்கப்படும் முகக்கவசத்தில் கரோனா வைரஸ் தொற்று ஏற்படாத வகையில் பாதுகாப்பு அம்சங்களும் செய்யப்பட்டு இருக்கும். எனவே அந்த முகக்கவசங்கள் மூலம் கரோனா தொற்று பரவுவதற்கான வாய்ப்புகள் குறைவுதான்.
தற்போது கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் 66 பேர், ஜிப்மரில் 29 பேர், காரைக்காலில் 2 பேர், மாஹேவில் 4 பேர், பிற பகுதியில் 2 பேர் என 103 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், அரசு மருத்துவக் கல்லூரியில் 3 பேர், ஜிப்மரில் ஒருவர் என மொத்தம் 4 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
புதுவை மாநிலத்தில் இதுவரை 202 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 95 பேர் குணமடைந்து, வீடு திரும்பியுள்ளனர். 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 10,321 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 9,872 பரிசோதனைகள் நெகட்டிவ் என்று வந்துள்ளது. இன்னும் 243 பரிசோதனைகள் முடிவுக்காகக் காத்திருப்பில் உள்ளன''.
இவ்வாறு டாக்டர் மோகன்குமார் கூறினார்.