புதுச்சேரியில் தீவிரமடையும் கரோனா: ஒரே நாளில் 18 பேருக்கு தொற்று உறுதி; பாதிப்பு எண்ணிக்கை 200-ஐ நெருங்கியது

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

புதுச்சேரியில் ஒரே நாளில் 18 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தொற்று பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. மேலும் பாதிப்பு எண்ணிக்கையும் 200-ஐ நெருங்கியுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இன்று (ஜூன் 14) ஒரே நாளில் புதிதாக 18 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 194 ஆகவும், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 99 ஆகவும் உயர்ந்துள்ளது. இதனால் புதுச்சேரியில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 200-ஐ நெருங்கியுள்ளது. இதுவரை 91 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது குறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் இன்று (ஜூன் 14) செய்தியாளர்களிடம் கூறும்போது, "புதுச்சேரியில் புதிதாக 18 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் 13 பேர் கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியிலும், 3 பேர் ஜிப்மரிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். காரைக்காலைச் சேர்ந்த ஒருவர் மகாராஷ்டிராவிலும், மாஹே பிராந்தியத்தில் ஒருவரும் சிகிச்சையில் உள்ளனர்.

இதுவரை புதுச்சேரி மாநிலத்தில் 194 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 99 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று பீமன் நகரைச் சேர்ந்த 56 வயது ஆண் உயிரிழந்தார். இதனால் இறந்தவர்கள் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் தற்போது இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் ஒருவரும், ஜிப்மரில் 8 பேரும் என 9 பேர் குணமடைந்து வீட்டுக்குச் சென்றுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 91 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 10 ஆயிரத்து 8 ஆர்டி பிசிஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 9,636 பரிசோதனைகள் 'நெகட்டிவ்' என்று வந்துள்ளது. இன்னும் 183 பரிசோதனைகள் முடிவுக்காக காத்திருப்பில் உள்ளன. புதுச்சேரி வீமன் நகர், பீமன் நகர், எல்லைப்பிள்ளைச்சாவடி ரத்தினா நகர், குருமாம்பேட், நெல்லத்தோப்பு சின்ன கொசப்பாளையம், தட்டாஞ்சாவடி விவிபி நகர், மேட்டுப்பாளையம் ஆகிய 8 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

ஜிப்மர் வளாகத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 2 பகுதிகள் தளர்த்தப்பட்டுள்ளன. புதுச்சேரியில் கடந்த 10 நாட்களாக தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக நேற்று 12 பேரும், இன்று 18 பேரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தற்போது தொற்று தீவிரமடைந்துள்ளது.

ஆகவே மக்கள் அனைவரும் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும். சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மக்கள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. அதனை தடுக்காவிட்டால் மிகப்பெரிய சிக்கலாக மாறிவிடும். தற்போதைய சூழலில் கபசுரக்குடிநீர், நிலவேம்பு கசாயம், ஆர்சனிக் ஆல்பம் ஆகியவற்றைக் கொடுத்து வருகிறோம்.

இப்போது தான் அவற்றை மக்கள் குடிக்க வேண்டும். மேலும் ஒவ்வொருவரும் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டு வீட்டைவிட்டு வெளியே வராமல் இருந்தால் கட்டுப்படுத்த முடியும்" என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in