

நிதி ஆதாரத்தைப் பகிர்ந்தளிக்க வேண்டும் என உள்துறை அமைச்சகம் போட்ட உத்தரவை மீறி ஆளுநரின் செயல்பாடுகள் இருக்கின்றன என்று புதுவை முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று (ஜூன் 12) செய்தியாளர்களிடம் கூறியதாவது:
‘‘மாஹே பகுதியில் அதிகவேக ரயில் திட்டத்தைக் கொண்டுவரக் கேரள அரசு நடவடிக்கை எடுத்தது. இந்த நடவடிக்கை எடுக்கின்ற சமயத்தில் மாஹே பகுதியில் பள்ளூர் வழியில் ரயில் திட்டம் செல்வதாக இருந்தது. முன்னாள் அமைச்சர் வல்சராஜ், ராமச்சந்திரன் எம்எல்ஏ ஆகியோர் எனக்குக் கடிதம் எழுதி, பள்ளூர் பகுதியில் ரயில் திட்டம் செல்வதன் மூலமாக பள்ளூர் பகுதி மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும். ஆகவே, கேரளா அரசானது ரயில் பாதை திட்டத்தை கேரளா வழியாகச் செல்வதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.
ஆனால், கேரள அரசு இந்த ரயில்வே திட்டத்தைக் கொண்டு வருவதற்கு முன்பாக, குறிப்பாக மாஹே பகுதியில் ரயில்வே திட்டம் செல்வதற்கு அவர்கள் முனைகின்ற சமயத்தில் எங்களுடைய அனுமதி எதையும் பெறவில்லை. புதுச்சேரி அரசும் அவர்களுக்கு எந்தவித ஒப்புதலும் அளிக்கவில்லை.
ஆனால், அவர்களே தன்னிச்சையாக இந்த ரயில் திட்டத்தைக் கொண்டுவருவதற்கு முடிவு எடுத்து மத்திய ரயில்வே துறை அமைச்சருக்கு அனுப்பி இருந்தார்கள். நான் ரயில்வே துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதி, அதன் மூலமாக கேரள மாநிலத்தில் செல்கின்ற அதிவேக ரயில்வே திட்டம் மாஹே பகுதியில் வருவதால் பள்ளூர் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது. கேரள அரசானது அவர்களுடைய இடத்தில் கொண்டு செல்ல வேண்டும் எனக் கடிதம் எழுதி இருந்தேன். இதனை அவரும் ஏற்றுக் கொண்டார்.
மத்திய அரசானது 2018-ம் ஆண்டு இறுதியில் நான் எழுதிய கடிதத்தின் அடிப்படையில் எனக்கு ஒரு பதில் அனுப்பி இருந்தார்கள். நிதியைக் கையாளுவதில் ஆளுநருக்கு ரூ.50 கோடி வரை அதிகாரமும், முதல்வருக்கு ரூ.10 கோடி வரை அதிகாரமும், ரூ.2 கோடி வரை துறைச் செயலர்களுக்கு அதிகாரமும் கொடுக்கப்பட்டுள்ளது.
டெல்லி மாநில அரசானது அவர்களுக்குள்ள நிதி ஆதாரத்தை உயர்த்த வேண்டும் என மத்திய அரசுக்குக் கோரிக்கை வைத்திருந்தனர். அதன்படி, ரூ.100 கோடி வரை அமைச்சரவைக்கும், ரூ.50 கோடி வரை முதல்வருக்கும், ரூ.10 கோடி வரை அதிகாரிக்களுக்கும் என்று மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லி ஆளுநர் அந்த அதிகாரத்தை முழுமையாக முதல்வருக்கும், அமைச்சர்களுக்கும் கொடுத்திருந்தார்.
நான் எழுதிய கடிதத்தின் அடிப்படையில், டெல்லியைப் போல் புதுச்சேரியிலும் நிதி ஆதாரத்தைக் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் மத்திய உள்துறை அமைச்சகம், ஏற்கெனவே கொடுத்திருந்த அதிகாரத்தை உயர்த்தி அதிகாரிகளுக்கு ரூ.5 கோடி வரையும், முதல்வர், அமைச்சர்களுக்கு ரூ.50 கோடி வரையும், ரூ.100 கோடி வரை அமைச்சரவைக்கும், இதற்கு மேல் ஆளுநருக்கு இருக்க வேண்டும் எனப் பரிந்துரை செய்து கடிதம் அனுப்பி இருந்தது. அந்தக் கடிதத்தை வைத்துக்கொண்டு ஆளுநர் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.
இதற்கிடையே எங்களுடைய அமைச்சரவை கூடி மத்திய அரசின் அறிவுரைப்படி டெல்லியைப் போல் புதுச்சேரியில் நிதி அதிகாரத்தை ஆளுநர் கொடுக்க வேண்டும் என முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றினோம். அதன் பிறகு, ஆளுநர் அரசுக்கு எதிரான செயல்பாடுகளைக் கண்டித்து 2019ம் ஆண்டு மார்ச் மாதத்தில் 6 நாட்கள் ஆளுநர் மாளிகை முன்பாகப் போராட்டம் நடத்தினோம்.
அமைதியான முறையில் போராட்டம் நடத்தியபோது 6-வது நாள் பேச்சுவார்த்தை நடத்த ஆளுநர் எங்களை அழைத்தார். அப்போது, நிதி அதிகாரத்தை 2019 ஏப்ரலில் பகிர்ந்து அளிப்பதாக ஆளுநர் அறிவித்தார். அதனை அவர் செய்யவில்லை. அதற்கு மாற்றாக மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார். அவர் என்ன கடிதம் எழுதினார் என்று எங்களுக்கு தெரியாது. அதில் அமைச்சரவைக்கும், ஆளுநருக்கும் கருத்து வேறுபாடு இருக்கிறது. அதனை மத்திய அரசு நிவர்த்தி செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார்.
ஆளுநர் எழுதியுள்ள கடிதமே தவறான ஒன்று. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு, துறைச் செயலர்களுக்கு நிதியைப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் போட்ட உத்தரவை மீறி ஆளுநரின் செயல்பாடுகள் இருக்கின்றன. இது மத்திய அமைச்சரவை, உள்துறை, குடியரசுத் தலைவரை அவமதிப்பதாகும்.
ஏற்கெனவே மத்திய அரசு முடிவு செய்ததை இனிமேல் மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், காலம் தாழ்த்தி எங்களுடைய அரசுக்குக் களங்கம் விளைவிக்க வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் கோப்பு சென்றால் தேவையில்லாமல் கேள்வி கேட்டு முட்டுக்கட்டை போட்டு அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்தி வருகிறார். இது சம்பந்தமாக இரண்டு தினங்களுக்கு முன்பு அமைச்சரவையில் பேசினோம்.
ஆளுநர், இந்த நிதி அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கக் கூடாது என்று காலம் தாழ்த்தி வருகிறார். ஆகவே, இது சம்பந்தமாக உள்துறை அமைச்சருக்குப் பரிந்துரைக்க வேண்டும் என்று கலந்தாலோசித்தோம். இது தொடர்பாக மேல் நடவடிக்கை எடுப்போம். ஆளுநரின் மக்கள் விரோதப் போக்காலும், அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தாலும் எங்களுடைய திட்டங்களை நிறைவேற்றக் காலதாமதம் ஏற்படுகிறது என்பது மக்களுக்குப் தெரியும்.
இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் காணொலிக் காட்சி மூலம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் நான் கலந்துகொண்டு பிப்ரவரி மாதம் வரை புதுச்சேரி மாநில அரசுக்குத் தேவையான இழப்பீட்டைக் கொடுத்துள்ளீர்கள். மார்ச், ஏப்ரல், மே மாதத்துக்கான நிதியைக் கொடுக்கவில்லை.
இதனால் மாநிலம் வருவாய் இல்லாமல் தத்தளிக்கிறது. வியாபாரிகள் தங்களுடைய வரவு செலவுக் கணக்கைச் செலுத்துவற்கான காலத்தை நீட்டித்துள்ளீர்கள். இதனால் மாநிலம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே உடனடியாக இந்த மூன்று மாதத்துக்கான இழப்பீட்டைச் சரிசெய்ய வேண்டும். அதற்குத் தேவையான நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும். இல்லையென்றால் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் எங்களுடைய மாநிலம் பாதிக்கப்படும் என்று வலியுறுத்தினேன். அவரும் பரிசீலனை செய்வதாகக் கூறியுள்ளார்.
இப்போது மத்திய அரசும், மாநில அரசுகளும் நிதி நெருக்கடியில் இருக்கின்றன. என்னோடு பல மாநில நிதியமைச்சர்கள், துணை முதல்வர்கள் இந்தக் கருத்தை வலியுறுத்தி மத்திய அரசு இந்த நேரத்தில் மாநிலங்களுக்கு உதவ வேண்டும். குறிப்பாக கரோனா தொற்றுள்ள இந்நேரத்தில் அதனைத் தடுத்து நிறுத்த மாநில அரசுகள் முனைந்து செயல்பட்டு வரும் நிலையில் மத்திய அரசின் உதவி தேவைப்படுகிறது என்பதைத் தெரிவித்தனர். நிதியமைச்சர் இது சம்பந்தமாக நல்ல முடிவை எடுப்பார் என்று நான் நினைக்கிறேன்’’.
இவ்வாறு நாராயணசாமி தெரிவித்துள்ளார்.