

பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து என்ற அறிவிப்பின் மூலம் மாணவர்கள், பெற்றோர் மத்தியில் நீங்காத இடம் பிடித்துள்ளார் முதல்வர் என, அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசினார்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் தொகுதியில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஏற்கெனவே அரிசி, காய்கறி தொகுப்பு, கபசுர குடிநீர், நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகளைத் தொடர்ந்து வழங்குகிறார்.
கரோனா தடுப்புக்கான விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறார். இதைத்தொடர்ந்து, பொதுமக்களுக்கு கோதுமை மாவு தொகுப்பு வழங்கும் திட்டத்தை இன்று மறவன்குளத்தில் தொடங்கினார்.
நிவாரணப் பொருட்களை வழங்கி வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசும்போது, "உலகத்தையே அச்சுறுத்தும் கரோனா நோயைத் தடுக்க முதல்வர் திட்டமிட்டு செயல்படுகிறார்.
நோய் தொற்று தடுப்பதில் இந்தியாவுக்கே முதன்மை மாநிலமாக தமிழகம் உள்ளது. இதற்கெல்லாம் முதல்வரின் நடவடிக்கையே காரணம். மாணவர்களின் நலனில் அக்கறை செலுத்தி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்ற அறிவிப்பு மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளது. இதன் மூலம் முதல்வர் மாணவர்கள், பெற்றோர் மத்தியில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளார்.
திருமங்கலம் தொகுதியில் ஏற்கெனவே அரிசி, காய்கறி தொகுப்பு உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கிய நிலையில், அடுத்த கட்டமாக தற்போது, கோதுமை மாவு தொகுப்புகளை வழங்கும் திட்டத்தை தொடங்கி உள்ளோம்.
இது மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெறும். மாவட்டத்தில் 5 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு நிவாரணப் பொருட்களை வழங்குவது என, இலக்கு நிர்ணயித்து செயல்படுத்தி வருகிறோம், என்றார்.